ஆண்கள் சிலர் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள காரணம்

ஆண்கள் சிலர் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள காரணம்

2 mins read
237f62c3-4f60-4b1e-ba95-df07be30a3db
‘கைனகோமாஸ்டியா’ நிலையுடைய ஆண்கள் தங்களது மார்பகம் பெரிதாக இருப்பதன் காரணமாகப் பிறர் முன்பு தாழ்வாகவும் சங்கடமாகவும் உணரக்கூடும். - படம்: பிக்சல்ஸ்

பொதுவாக 'ஆண் மார்பகம்’ என்று அழைக்கப்படும் ‘கைனகோமாஸ்டியா’ (Gynecomastia), சிங்கப்பூரின் பதின்ம வயதினரில் குறைந்தபட்சம் பாதிப் பேரையும், ஏறத்தாழ 30 விழுக்காட்டிற்கும் அதிகமான ஆண்களையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான, தீங்கற்ற மருத்துவ நிலையாகும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்களுக்குரிய தட்டையான மார்பு தங்களுக்கு இல்லை எனச் சங்கடப்பட்டு, பிறர் முன்னிலையில் தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் உணரக்கூடும்.

சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட கொழுப்பு உறிஞ்சுதலின் (Liposuction) வழி மார்பகக் குறைப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஐவன் புவா, தடிமனான மார்பகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பதின்ம வயதினர் முதல் நடுத்தர வயது ஆண்கள் வரை நூற்றுக்கணக்கானோரைச் சந்தித்துள்ளார்.

இத்தகையோர் தங்களின் மார்பக வடிவத்தை மறைக்க மார்பகக் காம்புகளில் ஒட்டுநாடாக்களை ஒட்டுவது, ஈரடுக்கு ஆடைகளை அணிவது மற்றும் இருண்ட, தளர்வான ஆடைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அணிவது போன்ற வழிகளைக் கையாள்கின்றனர்.

சிலர் தங்களது மார்பக அளவைக் குறைக்கும் நோக்கில் உடற்பயிற்சியும் செய்கின்றனர். இருப்பினும், இந்த மருத்துவ நிலை, கூடுதல் கொழுப்பால் ஏற்படுவதைவிட மார்பகச் சுரப்பி திசுக்களின் வளர்ச்சியாலேயே ஏற்படுவதால், உடற்பயிற்சி இதற்கு முழுத் தீர்வைத் தருவதில்லை.

“இந்நிலையைக் கொண்டுள்ள பெரும்பாலானோர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, மார்பு தட்டையாகவும் இயல்பாகவும் இருக்கும்போதுதான் ஆண்கள் தங்களை இயல்பானவர்களாகவும் அதிக ஆண்மையுடனும் உணர்கிறார்கள்,” என்று டாக்டர் புவா கூறுகிறார்.

ஹார்மோன் சுரப்பு மாறுபாடு காரணமாக கைனகோமாஸ்டியா நிலை ஏற்படுவதாக செங்காங் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சவிதா ராமச்சந்திரன் கூறுகிறார்.

தாயின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தாக்கத்தின் காரணமாக, இது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும்கூட ஏற்படக்கூடும்.

சிங்கப்பூரில் அனைத்து இனங்களையும் சேர்த்து 50 முதல் 60 விழுக்காடு வரையிலான பதின்ம வயதினருக்கு கைனகோமாஸ்டியா உள்ளது. பருவமடையும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு மாற்றங்கள், தற்காலிகமாக ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

ஆண்களில் 30 முதல் 65 விழுக்காட்டினருக்கு இந்த நிலை இருப்பதாக டாக்டர் சவிதா குறிப்பிடுகிறார்.

இதற்கான சிகிச்சை முறை என்பது, இந்த மருத்துவ நிலை உடையோரின் அன்றாட வாழ்க்கையை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது.

செங்காங் பொது மருத்துவமனையின் பிளாஸ்டிக், உடல் மறுசீரமைப்பு மற்றும் அழகியல் அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த டாக்டர் சவிதா, பதின்ம வயதினருக்கு ஹார்மோன் அளவு சீரானதும் இந்த நிலை தானாக சரியாகிவிடும் என்கிறார்.

மார்பகப் புற்றுநோய் அல்லது பிற கடுமையான பாதிப்புகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே தம்மிடம் மருத்துவ உதவி நாடுவதாக அவர் கூறுகிறார்.

எல்லாரும் அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்றும் டாக்டர் சவிதா குறிப்பிடுகிறார். இந்த நிலை இயற்கையான ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டு, பின்னர் அவை சீராகிவிட்டால், அறுவை சிகிச்சை எப்போதும் அவசியமில்லை என்கிறார் அவர்.

அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டால், சிறிய வெட்டுமூலம் மார்பகத் திசுக்களை அகற்றுவது அல்லது அதிகப்படியான கொழுப்பையும் திசுக்களையும் அகற்ற கொழுப்பு உறிஞ்சுதல் சிகிச்சை செய்வது போன்ற வழிமுறைகள் இதில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்