இளம் உள்ளூர்க் கட்டடக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்

இளம் உள்ளூர்க் கட்டடக் கலைஞர்களுக்கு அங்கீகாரம்

3 mins read
25969734-3f4a-4d85-996c-3c63331a233f
‘யூஆர்ஏ’வின் ‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்டடக் கலைஞர் சியா யூ சியன் தனது வடிவமைப்பு பற்றி அமைச்சர் இந்திராணி ராஜாவிடம் விளக்குகிறார். - படம்: ரவி சிங்காரம்

கட்டடக் கலைஞர் சியா யூ சியனுக்கு, 43, இந்தியாவின் சிம்லாவில் ஆதரவற்றோருக்கான இல்லத்தை வடிவமைத்ததே அத்துறையில் முதல் அனுபவம். அந்தத் திட்டம் அவருக்குப் பெரிதும் உந்துதலளித்தது.

அதைத் தொடர்ந்து ‘காலாங் ரிவர்சைட்’, ‘கிரேட்டர் சதர்ன் வாட்டர்ஃபிரன்ட்’ பெருந்திட்டங்களை வடிவமைத்த அவர் இப்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) கட்டட, ஆராய்ச்சிக் கழகத்தில் வீவக வட்டாரங்களை வடிவமைத்துவருகிறார்.

பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) அங்கீகரித்த உள்ளூர் இளம் கட்டடக் கலைஞர்கள் 23 பேரில் அவரும் ஒருவர்.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் (யூஆர்ஏ) ‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ என்ற திட்டத்தின் நான்காம் அங்கீகார நிகழ்ச்சியில் அவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்காலத்தில் ஏற்பட்ட ஈராண்டு தாமதத்தைக் கருதி இவ்வாண்டு இத்திட்டத்தின் வயது வரம்பு 47 வயதுக்கு உயர்த்தப்பட்டது.

அங்கீகரிக்கபட்ட 23 பேரில் மூவர் 45 வயதைக் கடந்தவர்கள்.

அங்கீகரிக்கப்பட்ட கட்டடக் கலைஞர்கள் 23 பேருடன் அமைச்சர் இந்திராணி.
அங்கீகரிக்கப்பட்ட கட்டடக் கலைஞர்கள் 23 பேருடன் அமைச்சர் இந்திராணி. - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்
நிகழ்ச்சியில் ‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ திட்டத்தையொட்டிய நூலையும் வெளியிட்டார் அமைச்சர் இந்திராணி.
நிகழ்ச்சியில் ‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ திட்டத்தையொட்டிய நூலையும் வெளியிட்டார் அமைச்சர் இந்திராணி. - படம்: ரவி சிங்காரம்

2004, 2010, 2017ஆம் ஆண்டுகளில் நடந்த திட்டத்தின் முந்தைய அங்கீகார நிகழ்ச்சிகளில் கட்டடக் கலைஞர்கள் 60 பேர் அங்கீகரிக்கப்பட்டனர்.

சிங்கப்பூருக்கு அப்பால் மற்ற நாடுகளிலும் கால்பதித்து, பிரம்மாண்டமான கட்டட வடிவங்களை உருவாக்கி, தம் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்துள்ளனர் இந்தக்ட்டடக் கலைஞர்கள்.

கட்டடக் கலைத் துறைக்குப் புதிய திறனாளர்களை ஈர்த்தல்

“நம் கட்டடக் கலைஞர்களின் சாதனைகளைக் கொண்டாடும் அதேவேளை, அத்துறையின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்தவேண்டும்,” என்றார் அமைச்சர் இந்திராணி.

2023ல் அமைக்கப்பட்ட கட்டடக் கலை, பொறியியல் ஆலோசகர் செயற்குழு முன்மொழிந்த ‘இன்ஸ்பயர்’ மேம்படுத்தப்பட்ட வேலைப்பயிற்சித் திட்டம்வழி கூடுதல் கால அவகாசத்திலான வேலைப்பயிற்சிகளும் அதிகமான தொடக்க சம்பளமும் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

கட்டடக் கலைஞர் வாரியம் (பிஓஏ) ‘இன்ஸ்பயர்’ திட்டத்தை இவ்வாண்டு அங்கீகரிக்கும் என்றும், கட்டடக் கலைஞராகப் பதிவுசெய்வதற்குத் தேவைப்படும் காலத்தை அது குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

வாரியம் இவ்வாண்டு உரிமப் புதுப்பிப்புக்கான தொடர்ச்சியான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டங்களில், தலைமைத்துவம், வணிகம் தொடர்பான பாடத்திட்டங்களையும் சேர்க்கும் என அவர் கூறினார்.

கட்டடக் கலைஞர் வாரியமும் தொழில்துறைப் பொறியாளர்கள் வாரியமும் இணைந்து, சான்றிதழ்கள், உரிமங்கள் செல்லுபடியாகும் காலத்தை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதை நோக்கிச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரின் பொது இடங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து இவ்வாண்டு யூஆர்ஏ, கட்டடக் கலைஞர்களுக்கான போட்டிகளை நடத்தும். இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட 23 பேர்தான் காலாங் ஏரிக்கரைப் பூங்காவுக்கான போட்டியில் பங்கேற்கலாம்.

‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ கண்காட்சியை மார்ச் 31 வரை யூஆர்ஏ நிலையத்தில் காணலாம். பிப்ரவரி 4ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரை பொதுமக்களுக்கான நான்கு கருத்தரங்குகள் நடக்கும். இவை குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://go.gov.sg/20under45-fourthedition எனும் இணையத்தளத்தை நாடலாம்.

கண்காட்சியால் ஈர்க்கப்பட்ட சுற்றுப்பயணிகளில் ஒருவர் நியூயார்க்கைச் சேர்ந்த கட்டடக் கலைஞரும் நகரத் திட்ட மேலாளருமான தமயந்தி ராதே‌ஷ்வர். மரினா பே சேண்ட்சை வடிவமைக்க விண்ணப்பித்து இறுதிச் சுற்றுவரை சென்ற நிறுவனங்களில் அவரது நிறுவனமும் ஒன்று.

சிங்கப்பூரின் கட்டடக் கலைஞர்களையும் பசுமைப் போக்கையும் பாராட்டிய தமயந்தி.
சிங்கப்பூரின் கட்டடக் கலைஞர்களையும் பசுமைப் போக்கையும் பாராட்டிய தமயந்தி. - படம்: ரவி சிங்காரம்

“இங்குள்ள கட்டடக் கலைஞர்களின் திறனைக் கண்டு வியந்தேன். பல சிறந்த வடிவமைப்புகளும் கண்காட்சியில் இருக்கின்றன,” என்றார் தமயந்தி.

சிங்கப்பூரில் கட்டடங்களைப் பசுமைப்படுத்தும் போக்கைப் பாராட்டிய அவர், அனைத்துக் கட்டடங்களின் முதல் மாடியையும் மக்கள் அணுகக்கூடியதாக மாற்றலாம் என்றார். “கட்டடத்தைக் கட்டும்போது மக்கள் நடமாடிய இடத்தை எடுக்கிறோம். மீண்டும் அதே நடமாட்டத்துக்கு விட்டால் சிறப்பு,” என்றார் தம்யந்தி.

“குறிப்பாக, அரேப் ஸ்திரீட் போன்ற இடங்களில் ஒரு சந்திலிருந்து மற்றொன்றுக்குக் கடைகள் வழியாகச் செல்ல முடிந்தால் உதவியாக இருக்கும். சில இடங்களில், சாலையைக் கடக்க வெகுதூரம் நடக்கவேண்டியுள்ளது. ஹாங்காங்கிலும் இதே சவால். காருக்கு உகந்ததாக அல்லாமல் நடக்கும் மக்களுக்கு உகந்ததாக நகரை வடிவமைக்கலாம்,” என்றார் தமயந்தி.

‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ கண்காட்சியை மார்ச் 31 வரை யூஆர்ஏ நிலையத்தில் காணலாம்.
‘45 வயதுக்கு உட்பட்ட 20 பேர்’ கண்காட்சியை மார்ச் 31 வரை யூஆர்ஏ நிலையத்தில் காணலாம். - படம்: நகர மறுசீரமைப்பு ஆணையம்
தன் முதல் திட்டமாக ‘ரிவர் சஃபாரி’யை வடிவமைத்த ‘டிபி ஆர்கிடெக்ட்ஸ்’ இணை இயக்குநர் இங் சிங் சியுங், தன் திட்டங்களை 100 அடுக்குப் பேருந்தாகக் கற்பனை செய்து படைத்தார்.
தன் முதல் திட்டமாக ‘ரிவர் சஃபாரி’யை வடிவமைத்த ‘டிபி ஆர்கிடெக்ட்ஸ்’ இணை இயக்குநர் இங் சிங் சியுங், தன் திட்டங்களை 100 அடுக்குப் பேருந்தாகக் கற்பனை செய்து படைத்தார். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்