‘அங் கு குவே (Ang Ku Kueh)’ என்ற சீன பாரம்பரியப் பலகாரத்தைக் கொண்டு 1.9 மீட்டர் நீளத்திற்கு உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய சிங்கப்பூர் வரைபடம் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் முயற்சியாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பணியாளர்கள், கொளம் ஆயர் வட்டாரக் குடியிருப்பாளர்கள் என ஏறத்தாழ 300 பேர் கலந்துகொண்டனர்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட வெள்ளை, சிவப்பு நிற அங் கு குவே பலகாரங்கள் தயாரிக்கப்பட்டன.
அவற்றைக் கொண்டு உண்ணக்கூடிய சிங்கப்பூர் வரைபடம் உருவாக்கப்பட்டது.
பாரம்பரியத்தைக் கொண்டாடும் அதேநேரத்தில், சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் எனப் பல்லின மக்களும் ஒன்றுகூடி உருவாக்கிய இந்தச் சாதனை, சிங்கப்பூரின் சமூக ஒருங்கிணைப்பையும் பிரதிபலித்தது.
“கொரியா, இந்தோனீசியா, மியன்மார் என்று பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் எங்களோடு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நம் நாட்டின் ஒற்றுமையை அவர்களோடு சேர்ந்து கொண்டாடுவதும் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது,” என்றார் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியலில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் 23 வயது அஜிதா பிரோஸ்.
வகுப்பறைக்கு அப்பால், புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை, சமூகப் பொறுப்புணர்வு ஆகிய விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் முன்னிறுத்தியது.
“நிர்வாகக் குழு உறுப்பினராக மட்டுமன்றி, ஒரு சிங்கப்பூரராக இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது,” என்றார் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகக் கல்வி வளாகத்தின் தற்காலிகத் தலைவர் கே. திருமாறன்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பரப்பளவு சிறிதாக இருந்தாலும், நம் சமூக உணர்வு பெரிது என்று வலியுறுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.