உடற்பயிற்சி பெரும்பாலும் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் வேளையில் பொழுதுபோக்குகள் மனநலத்தை ஆதரிக்க உதவுகின்றன.
பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், நேர்மறை உணர்வுகளை மேம்படுத்தி செயல்திறனை அதிகரிக்கிறது.
வாசித்தல், விளையாட்டு, கைவினைப் பொருள்கள் உருவாக்குதல் எனப் பொழுதுபோக்குகளை வகைப்படுத்தலாம்.
பொழுதுபோக்கு என்பது ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் எந்த ஒரு செயலும் பொழுதுபோக்காகக் கருதப்படலாம்.
அதனால் பெறக்கூடிய நன்மைகளும் பல.
எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்
பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதால் மனச்சோர்வு அறிகுறிகள் குறைந்ததாக 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்தது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 90,000க்கும் மேற்பட்ட மூத்தோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் அவர்கள் மேம்பட்ட உடல்நலம், அதிக மகிழ்ச்சி, திருப்தியைப் பெறுவதாகவும் ஆய்வு தெரிவித்தது.
இருப்பினும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் வகைகள், தேவைப்படும் நேரம் போன்றவை குறித்துக் கூடுதல் ஆய்வு தேவை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை, குறிப்பாக கலை சார்ந்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது நல்வாழ்வுக்கு வித்திட்டு, அதிக நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆரோக்கியமான மூப்படைதல்
65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் 50,000 பேரின் ஓய்வு நேர நடவடிக்கைகளைப் பகுப்பாய்வு செய்த ஒரு ஜப்பானிய ஆய்வில், பொழுதுபோக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ‘டிமென்ஷியா’ எனும் முதுமைக்கால மறதி நோய் ஏற்படும் ஆபத்து குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மீன்பிடித்தல், தோட்டக்கலை, ‘கோல்ஃப்’, கைவினைப்பொருள் உருவாக்குதல், பயணம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சில பொழுதுபோக்குகளால் இந்த நோய் ஏற்படும் அபாயம் குறைவு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதனால் முதுமைக்காலம் உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பொழுதுபோக்குகள் இருப்பது முக்கியம்.
நாள்பட்ட நோய்க்கான ஆபத்து குறைகிறது
மன அழுத்தத்தைக் குறைக்கும் அல்லது உடல் அசைவை ஊக்குவிக்கும் விளையாட்டு சார்ந்த பொழுதுபோக்குகள் இதயம், ரத்தம், ரத்த நாளங்களை உள்ளடக்கிய இதய வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம்.
உடலின் அமைப்புகள் சிறப்பாகச் செயல்படும்போது இதய நோய், பக்கவாதம், ‘டிமென்ஷியா’, சில வகையான புற்றுநோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்து குறைகிறது.
மேலும், கலை வேலைப்பாடுகள் சார்ந்த பொழுதுபோக்குகள் ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்புடன் தொடர்புடைய கார்டிசோல் அளவைக் குறைக்கிறது.
பொழுதுபோக்கின் பலன்களைப் பெறுவது எப்படி?
குழுவுடன் பொழுதுபோக்குகளை மேற்கொள்ளலாம்: அதே பொழுதுபோக்கை விரும்பி ஈடுபடும் மற்றவர்களுடன் ஒன்றிணையும்போது கூடுதலாக சமூகப் பிணைப்பு உருவாகும்.
சமநிலையைக் கண்டறிவது: அதிகமான பொழுதுபோக்குகளை மேற்கொள்வதால் அதிக நன்மைகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கலை சார்ந்த பொழுதுபோக்கு ஒன்று இருந்தால் விளையாட்டு சார்ந்த மற்றொரு பொழுதுபோக்கில் ஈடுபடலாம். தனியாகவும் குழுக்களாகவும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
இயற்கையில் அமரவும்: வாரத்திற்கு குறைந்தது இரண்டு மணிநேரமாவது இயற்கையான சூழலில் செலவிடுவது மன, உடல் நலத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும். ஓவியம் வரைவது அல்லது கவிதை எழுதுவதை விரும்பினால் அதை இயற்கைச் சூழலில் அமர்ந்து செய்வது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

