மலரும் நினைவுகள்மூலம் முதியோரிடம் மறுமலர்ச்சி

2 mins read
c2213668-62b2-487e-97e9-2d3d5322316b
பழங்காலப் புகைப்படங்களைக் கண்டதும் மனத்தில் மலரும் நினைவுகளை உடல் அசைவுகளாக மாற்ற தொண்டூழியர்கள் முதியோருக்குக் கற்பித்தனர். - படம்: மாயா நடன அரங்கு

தங்களின் இளம்பருவத்தில் யாருடன் இருந்தோம், என்ன செய்தோம், என்ன விளையாடினோம் என, மனத்தில் பொதிந்திருந்த பழைய நினைவுகளைப் புதிய உருவில் முதியோர் சிலர் அனுபவித்தனர்.

சிங்கப்பூரின் பழைய தெருச் சந்தைகள், கம்போங் வீடுகள், முக்கிய இடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களைக் கண்டு தங்கள் சிறுவயது அனுபவங்களை அம்முதியோர் நினைவுகூர்ந்தனர். ஒருங்கிணைப்பாளர்களின் உதவியோடு அவர்கள் தம் சொந்தக் கதைகளை, குழுவாகச் செய்யக்கூடிய அசைவுகளாக மாற்றினர்.

முதியோர் நடவடிக்கை நிலையங்கள், சமூக மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றில் உள்ள முதியோருக்குக் கலைகள்மூலம் வாழ்வில் மறுமலர்ச்சி அளித்துவரும் ‘தாளத்தின் துடிப்பு’ (Pulse of the Beat) திட்டத்தின் இரண்டாம் பதிப்பாக இப்பயிலரங்குகளை மாயா நடன அரங்கு சென்ற ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை நடத்தியது. அவற்றில் கிட்டத்தட்ட 150 முதியோர் பங்கேற்றனர். முதல் பதிப்பில் பங்கேற்ற கிட்டத்தட்ட 90 முதியோரும் அவர்களில் அடங்குவர்.

மூவகையான அசைவுகள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இயற்கைக் கூறுகளையும் அன்றாட நடவடிக்கைகளையும் சார்ந்த அசைவுகளோடு, சீன ரிப்பன் நடனம்போல நாற்காலியில் அமர்ந்தபடியே செய்யக்கூடிய பண்பாட்டு அசைவுகளையும் அவர்கள் கற்றனர்.

ஈரச்சந்தையில் பொருள்கள் வாங்குவது, தொலைபேசி அங்காடியில் தொலைபேசி அழைப்பு செய்வது, கைத்தொலைபேசி எண்களை 555 புத்தகத்தில் எழுதுவது போன்ற அசைவுகளையும் அவர்கள் செய்து பழைய நினைவுகளை மீட்டனர்.

முதியோரின் பயணத்தையும் அவர்கள் முகங்களில் காணப்பட்ட பரவசம், உறுதி, மீள்தன்மை போன்ற உணர்ச்சிகளையும் புகைப்படங்களாகப் படம்பிடித்துக் காட்டும் கண்காட்சி மார்ச் 8ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 16ஆம் தேதிவரை அங் மோ கியோ பொது நூலகத்தில் இடம்பெறுகிறது.

முதியோரின் பயணத்தைச் சித்திரிக்கும் கண்காட்சி ஏப்ரல் 16ஆம் தேதிவரை அங் மோ கியோ பொது நூலகத்தில் இடம்பெறுகிறது.
முதியோரின் பயணத்தைச் சித்திரிக்கும் கண்காட்சி ஏப்ரல் 16ஆம் தேதிவரை அங் மோ கியோ பொது நூலகத்தில் இடம்பெறுகிறது. - படம்: மாயா நடன அரங்கு

“இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, ‘டௌன் சிண்ட்ரோம்’ கொண்ட நான்கு நடனமணிகளுடன் மூன்று துடிப்பான முதியோரும் தொண்டூழியர்களாக இந்த முதியோருக்கு அசைவுகளைக் கற்பித்துள்ளனர்,” என்றார் மாயா நடன அரங்கின் நிறுவனர் கவிதா கிரு‌ஷ்ணன்.

மாயா நடன அரங்கின் ஒரு பிரிவான ‘பலதரப்பட்டத் திறன்கள் நடனக் கூட்டு’ (Diverse Abilities Dance Collective) குழுவைச் சார்ந்த நடனமணிகளே அந்த நான்கு நடனமணிகள்.

எனினும், சில முதியோர் இடையிலேயே நோய்வாய்ப்பட்டதாலோ இறந்துவிட்டதாலோ திட்டத்தின் நிறைவைக் காணமுடியவில்லை என்பது தமக்கு வருத்தமளிப்பதாகக் கூறினார் கவிதா.

கண்காட்சியை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் அங் மோ கியோ பொது நூலகத்தில் ‘கலைகள்வழி முதியோரை ஈடுபடுத்துவது’ என்ற குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலைகள், முதியோர்ப் பராமரிப்பு, சமூகத் துறையினரைச் சார்ந்த நிபுணர்கள் எவ்வாறு முதியோரின் மனநலத்தை மேம்படுத்தலாமென ஆலோசித்தனர். முஸ்லிம் சிறுநீரகச் செயல் சங்கத்தின் தலைவர் அமீரலி அப்டீலி சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.

கண்காட்சியையொட்டி ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் அங் மோ கியோ பொது நூலகத்தில் ‘கலைகள்வழி முதியோரை ஈடுபடுத்துவது’ என்ற குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. 
கண்காட்சியையொட்டி ஏப்ரல் 6ஆம் தேதி பிற்பகல் அங் மோ கியோ பொது நூலகத்தில் ‘கலைகள்வழி முதியோரை ஈடுபடுத்துவது’ என்ற குழுக் கலந்துரையாடலும் இடம்பெற்றது.  - படம்: மாயா நடன அரங்கு

சென்ற ஆண்டும் இத்திட்டத்தின் முதல் பதிப்பின் நிறைவில் இத்தகைய புகைப்படக் கண்காட்சியும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

மேல்விவரங்களுக்கு https://mayadancetheatre.org/portfolio/pulse-of-the-beat-2/ இணையத்தளத்தை நாடலாம்.

திட்டத்தில் பங்கேற்ற தொண்டூழியர்களுடன் சிறப்பு விருந்தினர் அமீரலி அப்டீலி (நடுவில்), மாயா நடன அரங்கின் இணை நிறுவனர் கவிதா கிரு‌‌‌ஷ்ணன் (பின்வரிசையில் வலது).
திட்டத்தில் பங்கேற்ற தொண்டூழியர்களுடன் சிறப்பு விருந்தினர் அமீரலி அப்டீலி (நடுவில்), மாயா நடன அரங்கின் இணை நிறுவனர் கவிதா கிரு‌‌‌ஷ்ணன் (பின்வரிசையில் வலது). - படம்: மாயா நடன அரங்கு
குறிப்புச் சொற்கள்