வயிற்றில் ஏற்படும் ‘கடமுடா’ சத்தம்

வயிற்றில் ஏற்படும் ‘கடமுடா’ சத்தம்

2 mins read
1d318aab-ddbc-457a-b0d1-5f14ff3927f6
வயிற்றில் ஏற்படும் ஒலிகள் மருத்துவ ரீதியாக ‘போர்போரிக்மி’ (borborygmi) என்று அழைக்கப்படுகின்றன. - படம்: ஃப்ரீபிக்

நம்மில் பலருக்குச் சாப்பிட்ட பிறகு வயிற்றில் ‘கடமுட’ என்றோ குமிழி வெடிப்பது போன்றோ உருமல் போன்றோ சத்தம் கேட்பதைக் கவனித்திருப்போம். சில நேரங்களில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், பொதுவாக இது செரிமானத்தின் இயல்பான செயல்பாடே தவிர, நோயின் அறிகுறியன்று.

மருத்துவ ரீதியாக இந்த ஒலிகள் ‘போர்போரிக்மி’ (borborygmi) என்று அழைக்கப்படுகின்றன. உண்மையில் இந்த ஒலிகள் வயிற்றிலிருந்து வருவதில்லை. குடலிலிருந்தே உருவாகின்றன.

உணவானது செரிமானப் பாதை வழியாக நகரும்போது, குடல் தசைகள், ‘பெரிஸ்டால்சிஸ்’ (peristalsis) எனப்படும் அலை போன்ற இயக்கத்தில் சுருங்கி விரிகின்றன. அதே நேரத்தில், செரிமானச் சாறுகளும் வாயுவும் உணவு, திரவங்களோடு கலக்கின்றன. குடலானது குழாய் போன்ற வெற்று (hollow) அமைப்பைக் கொண்டிருப்பதால், குழாய்களுக்குள் தண்ணீர் பாய்வதைப்போல, இந்த அசைவுகள் நீரோட்டம் போன்ற அல்லது குமிழி வெடிப்பது போன்ற சத்தங்களை உருவாக்குகின்றன.

சாப்பிட்ட பிறகு செரிமானம் மும்முரமாக நடைபெறும்போதோ பசியாக இருக்கும்போதோ இந்தச் சத்தங்கள் இன்னும் அதிகமாகவும் தெளிவாகவும் கேட்கக்கூடும்.

பெரும்பாலான நேரங்களில், வயிற்றிலிருந்து வரும் இத்தகைய சத்தங்கள் தீங்கற்றவை. இருப்பினும், சில உணவுப் பழக்கவழக்கங்கள் இவற்றை அதிகரிக்கச் செய்யலாம். மிக வேகமாகச் சாப்பிடுவது, சாப்பிடும்போது பேசுவது, உறிஞ்சுகுழல் (straw) மூலம் பருகுவது அல்லது சூயிங் கம் (chewing gum) மெல்லுவது போன்றவற்றால் அதிகப்படியான காற்றை உள்ளிழுக்க நேரிடுகிறது.

பீன்ஸ், பருப்பு வகைகள், பால் பொருள்கள், முழு தானியங்கள், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் வாயுவை அதிகம் உற்பத்தி செய்வதால், அவையும் இந்தச் சத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

லாக்டோஸ் அல்லது குளூட்டன் போன்ற உணவுப்பொருள் ஒவ்வாமைப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, குடலில் அதிகப்படியான வாயு, திரவம் சேர்வதால், வழக்கத்தைவிட அதிகமான சத்தம் ஏற்படலாம்.

மெதுவாகச் சாப்பிடுவது, உணவைச் சிறிது சிறிதாகப் பிரித்து உண்பது, பிரச்சினையைத் தூண்டும் உணவுகளைத் தவிர்ப்பது போன்ற மாற்றங்கள் வயிற்றில் ஏற்படும் சத்தத்தைக் குறைக்க உதவும். இஞ்சி, புதினா, பெருஞ்சீரகம் (சோம்பு) கலந்த தேநீர் போன்ற இயற்கை மருத்துவ முறைகளும் வாயுவைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

வயிற்றில் சத்தம் ஏற்படுவது பெரும்பாலும் கவலைக்குரியதன்று. ஆனால், இச்சத்தங்கள் தொடர்ந்து நீடித்தாலோ அதனுடன் கடுமையான வயிற்று வலி, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாந்தி அல்லது காரணமில்லாத உடல் எடைக் குறைவு போன்றவை இருந்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.

மிக அரிதான சூழல்களில், கடுமையான அசௌகரியத்துடன் மிக அதிகமான சத்தம் கேட்டாலோ சத்தமே கேட்காமல் இருந்தாலோ அது குடல் அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு உடனடி அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படும்.

குறிப்புச் சொற்கள்