ஆப்பிரிக்காவின் ‘சிங்கப்பூர்’ என அழைக்கப்படும் ருவாண்டா

ஆப்பிரிக்காவின் ‘சிங்கப்பூர்’ என அழைக்கப்படும் ருவாண்டா

4 mins read
ருவாண்டா அதிபர் பால் காகேமே, “சவால்களைச் சாதனைகளாக மாற்றும் செயல்திறன் சிங்கப்பூருக்கும் ருவாண்டாவிற்கும் இடையிலான பொது அம்சம்,” என்று கூறினார். 2008ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், அந்தச் செயல்திறனே ருவாண்டா மக்களுக்கு ஓர் உத்வேகம் என்றார். 
bac6cc1b-a019-4213-9b84-339daf39eadd
ருவாண்டாவின் தேசியக் கொடி. - படம்: கெட்டி இமேஜஸ்
2022ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ருவாண்டா சென்றிருந்த முன்னாள் பிரதமர் லீ சியன் லூங், அந்நாட்டு அதிபர் பால் காகேமே (வலது).
2022ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ருவாண்டா சென்றிருந்த முன்னாள் பிரதமர் லீ சியன் லூங், அந்நாட்டு அதிபர் பால் காகேமே (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை அபாரமான வளர்ச்சி கண்டுவந்துள்ளது. 

உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியாக இருந்தாலும், தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வரிசையில் ஆய்வாளர்கள் சிலர், அண்மைக் காலத்தில் சிங்கப்பூரைப் போன்றே அபார வளர்ச்சி கண்டுள்ள நாடு ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர். அதனை ‘ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர்’ என்றும் அழைக்கின்றனர்.

அந்தப் பெருமை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவைச் சேரும். 

அங்கு 1994ஆம் ஆண்டில் டுட்சி இனத்தைச் சேர்ந்த மக்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் நடந்த கொடூரமான இனப்படுகொலை காரணமாக 500,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

2022ஆம் ஆண்டில் நடந்த கிகாலி இனப்படுகொலை நினைவஞ்சலியில் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் எழுதிய குறிப்பு.
2022ஆம் ஆண்டில் நடந்த கிகாலி இனப்படுகொலை நினைவஞ்சலியில் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் எழுதிய குறிப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதன் விளைவாக ருவாண்டாவின் பொருளியல் உருக்குலைந்தது. 

ஆனால், இன்று வலுவான ஆட்சியின் உதவியுடன் அந்த நிலையிலிருந்து மீண்டுவந்துள்ளது ருவாண்டா.

இதைப்போல் மேலும் பல நாடுகள் மீண்டுவந்து வளர்ச்சிப் பாதையில் செல்லும்போதும், ருவாண்டாவைக் குறிப்பாகச் சிங்கப்பூருடன் ஒப்பிடுவது ஏன்?

பொருளியல் வளர்ச்சி

கடந்த பத்தாண்டுகளில் ருவாண்டாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுதோறும் ஏழு முதல் எட்டு விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வணிக உறவுகளுக்கு உகந்த கொள்கைகளை உருவாக்குவது ஆகியவற்றில் ருவாண்டா பேரளவில் முதலீடு செய்துள்ளது.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை

சிங்கப்பூரைப் போலவே ருவாண்டா கடுமையான ஊழல் தடுப்பு நடவடிக்கைகளையும் திறமையான பொது நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

அமரர் லீ குவான் யூவின் தலைமைத்துவ அணுகுமுறையைப்போல, ருவாண்டா அரசாங்கமும் தகுதிக்கு முன்னுரிமை, பொறுப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அனைத்துலக வெளிப்படைத்தன்மை அமைப்பின் தரவுப்படி, ஆப்பிரிக்காவின் குறைந்த ஊழல் கொண்ட நாடுகளில் ஒன்றாக அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புறத் திட்டமிடலும் தூய்மையும்

ருவாண்டாவின் தலைநகரமான கிகாலி, தூய்மை, ஒழுங்கமைக்கப்பட்ட நகரத் திட்டமிடல், கடுமையான சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகள் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றுள்ளது.

சிங்கப்பூர் எவ்வாறு நகர்ப்புற ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதுகிறதோ, அதேபோல ருவாண்டாவும் குப்பை போடுதல், பிளாஸ்டிக் பயன்பாடு, கட்டட விதிமுறைகள் ஆகியவற்றின் மீதான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

மேலும், கட்டாய சமூகச் சேவைக்கான ‘உமுகாண்டா’ (Umuganda) என்ற நடவடிக்கை ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்றும் மேற்கொள்ளப்படும். 

1998ல் இனப்படுகொலைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரே குறிக்கோளுக்காக ஒன்றுகூடுதல்’ எனப் பொருள்படும் ‘உமுகாண்டா’ சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மறுசீரமைப்பு, வளர்ச்சி, தேசிய அடையாளம் ஆகியவற்றை வலுப்படுத்த உதவுகிறது, 

மக்கள் இணைந்து மரம் நடுதல், சாலைகளைச் சுத்தம் செய்தல் போன்ற பொதுப் பணிகளைச் செய்கின்றனர்.

தொழில்நுட்பமும் புத்தாக்கமும்

ருவாண்டா தன்னை ஒரு தொழில்நுட்ப மையமாக நிலைநிறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் (ICT), மருத்துவப் பொருள் விநியோகத்திற்கான ஆளில்லா வானூர்தி, அறிவார்ந்த நகரத் திட்டங்கள் போன்றவற்றில் அது முதலீடு செய்துவருகிறது.

‘ஃபைபர் ஆப்டிக் (fiber-optic)’ எனும் தேசிய அளவிலான கண்ணாடியிழை அலைவரிசைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது ருவாண்டா. 

மேலும், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கும் (startups), நிதித் தொழில்நுட்பவியல் (FinTech) புத்தாக்கங்களுக்கும் ஆதரவு அளிக்கிறது. 

இணையச் சேவைக்கான இணைப்பிலும் ஆப்பிரிக்காவின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக அது முன்னணியில் இருக்கின்றது.

இது சிங்கப்பூரின் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி நெறிக்கு ஈடானது.

சுற்றுலாத்துறை

ருவாண்டா இயற்கை வளங்களையும் வன உயிரியலையும் பயன்படுத்தி தனது சுற்றுலாத்துறையை மேம்படுத்தியுள்ளது.

மலைவாழ் கொரில்லாக் குரங்குகள் உட்பட பல்வேறு விலங்குகள் வாழும் மிகப்பெரிய இயற்கைச் சூழலும் அதில் அடங்கும்.

ருவாண்டாவின் தேசியப் பூங்காவில் உள்ள மலைவாழ் கொரில்லாக்கள்.
ருவாண்டாவின் தேசியப் பூங்காவில் உள்ள மலைவாழ் கொரில்லாக்கள். - படம்: எரிக் ராக்

வெளிநாடு சார்ந்த வருவாய் ஈட்டும் முதலீடுகளில் ருவாண்டாவின் சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது. 

2014ஆம் ஆண்டில் மட்டும் இந்தத் துறையின் மொத்த வருவாய் 305 மில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

சிங்கப்பூரைப் போலவே ருவாண்டாவும் அளவில் மட்டுமன்றி தரத்திலும் கவனம் செலுத்துகிறது. குறைந்த செலவுச் சுற்றுலாவைக் காட்டிலும் சிறப்பான, உயர்மதிப்புள்ள சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் அது பெரிதும் ஈர்க்கிறது.

மனிதவள மேம்பாட்டில் முதலீடு

1966ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.

பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒருமைப்பாட்டையும் உலகளாவிய வாய்ப்புகளையும் பெற இந்த இருமொழிக் கொள்கை வழிவகுத்தது.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அறிவுசார் பொருளியலை ஆதரிக்க கல்விக்கும் திறன் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது.

சிங்கப்பூரைப் போலவே, நீண்டகாலப் பொருளியல் வளர்ச்சிக்கான அடித்தளமாக மனிதவள மேம்பாட்டில் ருவாண்டா முதலீடு செய்து வருகிறது. 

கல்வி, தொழில்முறைப் பயிற்சி ஆகிய துறைகளில் முதலீடு செய்து, உற்பத்தித்திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் பாதையில் அது முன்னேறி வருகிறது.

2007 ஜூலையில் கிழக்கு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பில் இணைந்த ருவாண்டா, 2008ஆம் ஆண்டு கல்வி கற்பிக்கும் மொழியை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலமாக மாற்றியது.

கற்றல் தரத்தை உயர்த்தும் அதன் முயற்சிகளுக்கு உலக வங்கியின் நிதி, தொழில்நுட்ப ஆதரவும் துணைநின்றன.

ருவாண்டாவில் இன்று ஒன்பது ஆண்டுகள் அடிப்படைக் கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்படுகிறது. அதனைப் பன்னிரண்டு ஆண்டுகளாக விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்