இளையர்களை அதிகம் பாதிக்கும் சையாட்டிகா

2 mins read
3d2de917-3860-437e-af1a-a50d1e614b5f
பெரியவர்களைத் தாண்டி இளையர்களையும் பாதிக்கும் சையாட்டிகா. - படம்: செயற்கை நுண்ணறிவு

கொள்ளைநோய் நேரத்தில் பல மாதங்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்த முகம்மது சாக்கி சைபி, 28, உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்ல முடிவெடுத்தார்.

‘டம்ப்பெல்’ எடையைப் பயன்படுத்தி குந்துகை பயிற்சியில் ஈடுபட்ட திரு சாக்கி, மறுநாள் கீழ்முதுகு முதல் இடது கால் வரை எரிச்சலுடன் கூடிய கடுமையான வலியை உணர்ந்தார்.

நீண்ட நாள் உடற்பயிற்சி செய்யாததால் வலி ஏற்பட்டதாக நினைத்துகொண்டு திரு சாக்கி மீண்டும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார்.

அதன் பிறகு, அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் அந்த வலியை அவ்வப்போது உணர்ந்தார். ஆனால் சென்றாண்டு தொடக்கத்தில் அந்த வலி மேலும் கடுமையானது.

பணியிடத்தில் ஒரு பொருளை எடுக்க குனிந்தபோது முகம்மது சாக்கி தீடீரென அசைய முடியாமல் உறைந்து போனார்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு சையாட்டிகா எனப்படும் நரம்புப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.

நரம்பின் மீது அழுத்தம் கொடுக்கும் தண்டுவட இடைத்தட்டின் (‘டிஸ்க்’) வெளியேற்றம் காரணமாக சையாட்டிகா ஏற்படும்.

கீழ்முதுகில் தொடங்கி கால்கள் வரை செல்லும் ‘சையாட்டிக்’ நரம்பு அழுத்தப்படும்போது உண்டாகும் வலி சையாட்டிகா எனப்படுகிறது.

பிட்டங்கள், தொடை, கொண்டைக்கால் அல்லது பாதங்களில் துடித்தல் வலி, கூச்ச உணர்வு, மரத்துப்போதல் அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படும்.

உட்கார்ந்திருக்கும்போது இருமும்போது அல்லது தும்மும்போது வலி மோசமடையலாம். மேலும் இது வழக்கமாக உடலின் ஒரு பக்கத்தை மட்டுமே பாதிக்கும்.

சையாட்டிகாவால் பாதிப்படையும் இளையர்கள்

பெரும்பாலும் பெரியவர்களைப் பாதிக்கும் சையாட்டிகாவால் இளையர்கள் பலர் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறைந்த அசைவுள்ள வாழ்க்கை முறை, திடீர் உடற்பயிற்சி, உடற்பயிற்சியின்போது தவறுதலான உடல் நிலை, மோசமான உடற்பயிற்சி தோரணை போன்ற அம்சங்களுடன் சையாட்டிகா இணைக்கப்பட்டுள்ளது.

கைப்பேசியைப் பார்க்கும்போது கழுத்தை முன்னோக்கி வளைக்கும் பழக்கம் கழுத்தில் மட்டும் சிரமத்தை ஏற்படுத்தாமல் இடுப்புத் தண்டுவடத்தில் உள்ள சுமையும் அதிகரிக்கிறது.

காலப்போக்கில் அது தண்டுவட இடைத்தட்டில் வீக்கத்தை ஏற்படுத்தி அல்லது அதிகமாக்கி சையாட்டிக் நரம்பை அழுத்தக்கூடும்.

விளையாட்டிலோ அல்லது தீவிர உடற்பயிற்சிகளிலோ சுறுசுறுப்பாக இருக்கும் இளையர்கள் அழுத்தம், அதிக எடை தூக்குதல் அல்லது தவறாக உடல் தோரணை ஆகியவற்றால் அடிக்கடி முதுகு வலியை எதிர்நோக்குவார்கள்.

இதில் நற்செய்தி என்னவென்றால் இளம் நோயாளிகளை எளிதில் குணப்படுத்த முடியும்.

முகம்மது சாக்கி இரண்டு குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சை முறைகளை மேற்கொண்டார்.

சிகிச்சைக்குப் பிறகு குணமடைவதற்காகவும், தசைகளைப் பலப்படுத்துவதற்காகவும் அவர் பல வாரங்கள் உடற்பிடிப்புச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

நரம்பு நிரந்தரமாகப் பாதிக்கக்கூடிய அறிகுறிகள் தென்படும்போது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்