உடலியக்கத்திற்குப் பின்னணியில் உள்ள அறிவியல்

உடலியக்கத்திற்குப் பின்னணியில் உள்ள அறிவியல்

தசைகளை சுறுசுறுப்பாக வைத்திருப்பது வகை 2 நீரிழிவு, அழற்சி (வீக்கம்), இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்
கோப்புப் படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

18 Nov 2026 - 7:59 am

2 mins read

சிறந்த உடற்பயிற்சி முறை என்பது உடற்பயிற்சிக் கூடத்தில் உங்களை மூச்சுத் திணற வைக்கும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் உங்களால் தொடர்ந்து செய்யக்கூடிய ஒன்றே சிறந்தது.

ஆனாலும், உடற்பயிற்சி என்பது பெரும்பாலும் கடுமையான உடலுழைப்புடன் மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. இதனால் உடலியக்கம் என்பது ஓர் உயிரியல் தேவை என்பதைவிட கடினமான ஒரு கூடுதல் கடமைபோலத் தோன்றுகிறது.

தூக்கம், ஊட்டச்சத்தைப் போலவே உடலியக்கமும் இன்றியமையாதது.

உடற்பயிற்சி அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற முடியாத அளவுக்கு கடினமாகத் தோன்றும் போது, பலர் அதைத் தொடங்குவதற்கு முன்பே கைவிட்டு விடுகிறார்கள். உடல் இயங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படாத எந்த ஒன்றும் காலப்போக்கில் தன் திறனை படிப்படியாக இழந்துவிடும்.

உடலின் தசைகள், வளர்சிதை மாற்றம், நரம்பு மண்டலம் மற்றும் மூளை ஆகியவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்கின்றன.

இந்தத் தொடர்பில் உடலியக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி என்பது நரம்புகளின் ஆரோக்கியம், கற்றல் மற்றும் நினைவாற்றலை ஆதரிக்கும் புரதமான மூளை சார்ந்த நியூரோட்ரோபிக் காரணியை தூண்டுகிறது.

எனவே, நடைப்பயிற்சி அறிவாற்றல் செயல்பாட்டிற்கு துணைபுரியும். மேலும், உடலியக்கம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

ஏறக்குறைய 30 வயதிலிருந்தே தசை அளவும் வலிமையும் குறையத் தொடங்கலாம்.

இந்தப் படிப்படியான தசை இழப்பு ‘சார்கோபீனியா’ என அழைக்கப்படுகிறது. இது உடலியக்கமின்மை, போதுமான ஊட்டச்சத்தின்மையால் மேலும் வேகமடையும்.

அதிகப் பலன் தரும் எளிய பயிற்சிகள்

நாற்காலியில் அமர்ந்து எழுதல்: கால்களின் வலிமையை வளர்க்கவும் உடல் சமநிலையை ஆதரிக்கவும் ஒரு நாற்காலியிலிருந்து எட்டு முதல் பத்து முறை எழுந்து அமரப் பழகுங்கள்.

குதிங்கால் உயர்த்துதல்: கெண்டைக்கால் தசைகளை வலுப்படுத்தி, கணுக்கால் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கும்.

மார்பை விரிக்கும் பயிற்சி: உங்கள் கைகளைப் பின்புறம் கோர்த்து, மார்புப் பகுதியை நீட்டுவதற்கு கைகளை மெதுவாக மேலே உயர்த்தவும்.

முதுகெலும்பு திருப்புதல்: முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க மெதுவாக இருபுறமும் உடலைத் திருப்பவும்.

இயக்க இடைவேளைகள்: தொடர்ந்து உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் எழுந்து நடக்கவும்.

நடைப்பயிற்சி: எவரும் எளிதில் செய்யக்கூடிய, உடலின் எடையைத் தாங்கிச் செய்யப்படும் இந்த உடற்பயிற்சி, எலும்பு ஆரோக்கியத்திற்கும் மனநிலைக்கும் நலம் சேர்க்கும்.

இந்தப் பயிற்சிகளின் நோக்கம் மிகச் சிறந்த உடலமைப்பைப் பெறுவது மட்டுமன்று; நீண்ட காலத்திற்குத் தற்சார்புடனும் தகுதியுடனும் இயங்கக்கூடிய உடலைப் பெற்றிருப்பதுதான்.

குறிப்புச் சொற்கள்