மணம் கலந்த நிவாரணம் அளிக்கும் தாவர எண்ணெய்கள்

2 mins read
90b48dc4-5cc6-4ba1-898c-3597f2e9b2b3
நறுமணமுள்ள தாவரச் சாறுகளை வேகவைத்து அல்லது குளிரழுத்தி, மணமூட்டும் தாவர எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.  - படம்: பிக்சாபே

தூக்கமின்மை, தலைவலி, அஜீரணம் போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சினைகளுக்கு முதலில் நாம் தக்க மருத்துவ சிகிச்சை பெறுவதுண்டு.

ஆனால், மணமூட்டும் தாவர எண்ணெய்கள் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது என்பது சுவாரசியமான ஒன்றுதான். 

நறுமணமுள்ள தாவரச் சாறுகளை வேகவைத்து அல்லது குளிரழுத்தி, மணமூட்டும் தாவர எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகள் பழமையான அரோமா சிகிச்சைக்குப் பயன்படும் இந்த எண்ணெய்களை நுகரலாம் அல்லது சருமத்தில் இட்டுக் கொள்ளலாம். சிலவற்றை உணவில் அல்லது தண்ணீரில் சேர்த்து அருந்தலாம் என்றும் நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 

பிரபல மணமூட்டும் தாவர எண்ணெய்கள் என்னென்ன, அவை எந்தக் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் என்பதை ஆராயலாம்! 

லாவெண்டர் மணமூட்டும் தாவர எண்ணெய்

மணமூட்டும் தாவர எண்ணெய்களில் மிகப் பிரபலமானது லாவெண்டர். இது பெரும்பாலும் நல்ல உறக்கத்திற்கும் மன உளைச்சலை போக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

‘டீ ட்ரீ’ மணமூட்டும் தாவர எண்ணெய்

முகப்பரு மற்றும் பிற தோல் நோய்த்தொற்றுகளுக்கு ‘டீ ட்ரீ’ மணமூட்டும் தாவர எண்ணெய்ப் பயனுள்ளதாக இருக்கிறது. 

‘பெப்பர்மிண்ட்’ மணமூட்டும் தாவர எண்ணெய்

‘பெப்பர்மிண்ட்’ மணமூட்டும் தாவர எண்ணெய் நாசிப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும், இது முடி வளர்ச்சிக்கும் உதவும். 

எலுமிச்சை மணமூட்டும் தாவர எண்ணெய்

பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை எலுமிச்சை மணமூட்டும் தாவர எண்ணெய் நீக்கும். அத்துடன், அது கர்ப்பக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் அதிகாலைச் சோர்வையும் போக்க உதவும். 

‘யூகலிப்டஸ்’ மணமூட்டும் தாவர எண்ணெய்

நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உடலில் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் ‘யூகலிப்டஸ்’ மணமூட்டும் தாவர எண்ணெய் பெரிதும் உதவும். 

மணமூட்டும் தாவர எண்ணெய்கள், உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சில நன்மைகளை அளிக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இருப்பினும் தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்குச் சரியான மருத்துவ ஆலோசனை தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 

குறிப்புச் சொற்கள்