எஸ்ஜி60ஐ கொண்டாடும் வகையில், 1,001 பேர் திரண்டு நின்று எஸ்ஜி60 எனும் எழுத்து வடிவத்தை உருவாக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இது சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது.
நமது தெம்பனிஸ் நடுவத்தின் எட்டாம் ஆண்டுடன் சிங்கப்பூரின் அறுபதாவது ஆண்டையும் கொண்டாடும் நோக்கில் வடிவத்தை உருவாக்கும் அங்கத்துடன் அனைவரும் பங்கேற்ற ‘கே-பாப் எக்ஸ்’ உடற்பயிற்சி அங்கமும் இடம்பெற்றது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி இசை, உடற்பயிற்சி, ஒன்றிணைவு ஆகியவற்றுடன் துடிப்பாக நடந்தேறியது.
மொத்தம் 150 ‘கே-பாப் எக்ஸ்’ பயிற்றுநர்களின் தலைமையில், தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்கள் இணைந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.
பல்வேறு வயதுடைய மக்களை ஒன்றிணைத்த இந்நிகழ்ச்சி சிங்கப்பூரை ஒரே சமூகமாகக் கொண்டாடியதுடன் பங்கேற்பாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாகவும் அமைந்தது.
“இந்நிகழ்ச்சிக்காகத் தெம்பனிஸ் வெஸ்ட் சமூக விளையாட்டுக் கட்டமைப்புடன் கைகோத்துச் செயல்பட்டதில் மகிழ்ச்சி. முதன்முறை இவ்வகை பயிற்சி மேற்கொள்பவர்கள் முதல் உடற்பயிற்சி ஆர்வலர்கள் வரை அனைவரும் விரும்பும் நோக்கில் இந்நிகழ்ச்சி அமைந்ததில் பெருமகிழ்ச்சி,” என்றார் நமது தெம்பனிஸ் நடுவத்தின் பேச்சாளர்.
“எனக்கு ‘கே-பாப்’ வகை உடற்பயிற்சிகள் மிகவும் பிடிக்கும். வேடிக்கையான, அனைவரையும் உள்ளடக்கிய, அர்த்தமுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி,” என்றார் பாசிர் ரிஸ் பகுதியிலிருந்து வந்திருந்த பகுதி மின்கடத்தித் துறை ஊழியர் தீபு ராமண்ணா, 39.
“இந்த நிகழ்ச்சி குறித்து சமூக ஊடகம் மூலம் அறிந்துகொண்டேன். இப்போது பெரும்பாலும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் வாழும் நிலை உள்ளது. இவ்வாறான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் பலரைச் சந்திக்கவும் பேசிப் பழகவும் வாய்ப்பு கிட்டுகிறது,” என்றார் அப்பர் சாங்கி வட்டாரவாசியான கல்பனா பாலச்சந்திரன், 34.