தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேலாங் மேற்கு சமூக மன்றத்தில் எஸ்ஜி60 கொண்டாட்டம்

1 mins read
5754041a-ab22-4c13-b93c-60c68f339257
போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்ற மாணவர்கள். - படம்: கேலாங் மேற்குச் சமூக மன்றம்
multi-img1 of 2

கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மே 24ஆம் தேதி மாலை எஸ்ஜி60 கொண்டாட்டத்திற்கும் சிறப்புப் பட்டிமன்றத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், தொடக்கநிலை முதல் உயர்நிலை இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘எஸ்ஜி60’ எனும் கருப்பொருளில் வண்ணம் தீட்டுதல், படம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசாகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘தொழில்நுட்பம் நம் சிந்தனைத் திறனை விதைக்கிறதா? சிதைக்கிறதா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக முனைவர் மன்னை க. இராஜகோபாலன் செயலாற்றினார்.

‘விதைக்கிறது’ என்ற அணியில் திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன், திருமதி அகிலா மணிகண்டன், மாணவர் முஹம்மது மாதிஹ் ஆகியோரும், ‘சிதைக்கிறது’ என்ற அணியில் திரு இராம்குமார் சந்தானம், குமாரி செய்யிதலி ஃபாத்திமா, மாணவி தக்‌ஷினி முத்துக்குமார் ஆகியோரும் தங்கள் வாதங்களைச் சான்றுகளோடும் நகைச்சுவை கலந்தும் எடுத்துவைத்தனர்.

“தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு, அதன் பலனால் நம் சிந்தனையை விதைப்பதும் சிதைப்பதும் அதனைப் பயன்படுத்தும் நம் கைகளில் உள்ளது. ஆகவே, தொழில்நுட்பம் நம் சிந்தனைத்திறனை விதைக்கிறது,” என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்