கம்பன் விழாவில் பார்வையாளர்களை ஈர்த்த ‘சூர்ப்பணகை’

கம்பன் விழாவில் பார்வையாளர்களை ஈர்த்த ‘சூர்ப்பணகை’

2 mins read
568f6973-70fa-4d08-b342-3733cb968c95
சிறப்பு விருந்தினருடன் குறுநாடகத்தில் பங்கேற்ற ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்களும் அதனை இயக்கிய ஆசிரியைகளும். - படம்: நாதன் ஸ்டூடியோ

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழாவில் இவ்வாண்டு ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் படைத்த ‘சூர்ப்பணகை’ குறுநாடகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஏறக்குறைய 15 நிமிடங்கள் இடம்பெற்ற அக்குறுநாடகத்தில் 10க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக நடித்தனர்.

செப்டம்பர் 14ஆம் தேதி, உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் அக்குறுநாடகம் மேடையேறியது.

விழாவில் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைவரும் சுகாதாரச் சேவைப் பராமரிப்பு ஊழியர்கள் சங்கத் தலைவருமான திருவாட்டி கே. தனலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழாவில் சிறப்பு அங்கமாக ‘மூல நூலும் முதன்மை நூலும்’ என்னும் தலைப்பில் தமிழகத் திரைப்பட, ஆவணப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்.

மூல நூலை முழுவதுமாகத் தழுவாமல் கம்பர் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப பல இடங்களில் மாற்றம் செய்திருப்பதை அவர் விளக்கினார்.

பார்வையாளர்களுக்குக் கம்பராமாயணத்தில் ‘காஹூட்’ வழி புதிர்ப் போட்டி நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கம்பன் விழாவை ஒட்டி கம்பன் கவிதைகளில் மாணவர்களுக்கும் ‘காஹூட்’ வழியாகப் புதிர்ப் போட்டி நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. உயர்நிலை 1&2, உயர்நிலை 3, உயர்நிலை 4 & 5, உயர்கல்வி நிலையங்கள் ஆகிய பிரிவுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சக்தி நுண்கலைக்கழகத்தினர் ‘ராமன் எத்தனை ராமனடி’ பாடலுக்கு நடனமாடினர். ஏறக்குறைய 200 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்