தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளைப் படமாக்கிய ‘என் குறுந்திரையில் ஒரு சிறுகதை’ போட்டி

2 mins read
e2ae72ec-d345-48c8-ac02-9be3a31d35a2
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராளர்களுடன் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். - படம்: ஏற்பாட்டுக் குழு

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக இன்போனிடிக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த ‘என் குறுந்திரையில் ஒரு சிறுகதை’ போட்டியில் பிராட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகை சூடியது.

வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிச்சுற்று ஏப்ரல் 19ஆம் தேதியன்று (சனிக்கிழமை) தேசிய நூலக வளாகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களின் கதைகளுக்கு மாணவர்கள் திரைக்கதை எழுதி, ஒளிக்காட்சியாக இயக்கும் இப்போட்டிக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மாணவர்களுக்கான பயிலரங்கு நடத்தப்பட்டது. அரவிந்த், ஹரிஹரன் ஆகியோர் இப்பயிலரங்கை வழிநடத்தினர்.

பயிலரங்கில் 16 பள்ளிகளிலிருந்து மொத்தம் 62 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவற்றில், 14 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளை போட்டிக்கு அனுப்பி வைத்தனர். இறுதிச்சுற்றுக்குத் தேர்வான ஆறு பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்கள் படைத்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.

தேசிய நூலக வாரியத் தமிழ்ச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு SG50 கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகப் பழைமையான அரிய தமிழ் நூல்களை மின்மயப்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தில் சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடி எழுத்தாளர்களின் கதைகளும் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவற்றிலிருந்து சில கதைகளைத் தேர்வுசெய்து, அவற்றை மாணவர்கள் படித்துக் குறும்படமாக்கியிருப்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

போட்டியில் இரண்டாம் இடத்தை என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வென்றனர். வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பும் பங்கேற்ற மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்