தோள்பட்டை இறுக்கமும் வலியும்: காரணங்களும் தீர்வுக்கான வழிமுறைகளும்

தோள்பட்டை இறுக்கமும் வலியும்: காரணங்களும் தீர்வுக்கான வழிமுறைகளும்

2 mins read
f0a40e2b-40f8-492a-85ce-f3b92245a676
எந்தவொரு தெளிவான காரணமும் இன்றி உறைந்த தோள்பட்டை பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். - படம்: அடோபி ஸ்டாக்

உங்களது தோள்பட்டைகள் இறுக்கமாகவும் வலியுடனும் இருக்கின்றனவா? கைகளை நீட்டுவதற்கு அசௌகரியமாக உணர்கிறீர்களா? இதற்குக் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் பிரச்சினையைக் கண்டறிவதற்கு மருத்துவ உதவியை நாடுவது முக்கியம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1. உறைந்த தோள்பட்டை

தோள்பட்டையை அசைக்கும்போது ஏற்படும் இறுக்கம் அல்லது வலிக்கு ‘உறைந்த தோள்பட்டை’ பாதிப்பு காரணமாக இருக்கலாம் என்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அய்லீன் டே கூறுகிறார்.

தோள்பட்டை மூட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள சவ்வுப்பையில் ஏற்படும் வீக்கம், தடிமன் காரணமாக இப்பாதிப்பு ஏற்படுகிறது. எந்தவொரு தெளிவான காரணமும் இன்றியும்கூட உறைந்த தோள்பட்டை பாதிப்பு ஏற்படலாம் என்று டாக்டர் டே குறிப்பிடுகிறார்.

இதற்கு வலி நிவாரண சிகிச்சைகள், இயன் மருத்துவப் பயிற்சிகள் மூலம் நோயாளிகள் தங்களது அசைவுத் திறனை மீண்டும் பெற்று, அன்றாடச் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

2. தோள்பட்டை நரம்பு அழுத்தம்

தோள்பட்டை நரம்பு அழுத்தமும் வலியை ஏற்படுத்தி, நோயாளியின் அசைவுத் திறனைப் பாதிக்கலாம் என்று இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையின் தோள்பட்டை, முழங்கை அறுவை சிகிச்சைப் பிரிவு நிபுணர் லூக் பீட்டர் கூறுகிறார்.

தோள்பட்டை மூட்டைச் சுற்றியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது தசைநார் கிழிவதற்கும் வழிவகுக்கும்.

இந்த நரம்பு அழுத்தம், தசைநார் காயங்களால் கைகளை அசைக்கும் திறன் பாதிக்கப்படும் என்று அவர் கூறுகிறார். இதனால் மக்கள் கைகளை நீட்டவோ உயர்த்தவோ சிரமப்படலாம். இருப்பினும், மருத்துவர் பரிசோதித்து கைகளையும் தோள்பட்டையையும் அசைக்கும்போது அசைவுத் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும்.

3. மூட்டுத் தேய்மானம்

மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம், தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை இழக்கச் செய்யும் என்று டாக்டர் பீட்டர் கூறுகிறார். இதைக் கண்டறிய ஊடுகதிர் போன்ற மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படும்.

4. மூட்டு விலகல், தொற்று மற்றும் பிற காரணங்கள்

தோள்பட்டை வலி, இறுக்கத்துடன் மற்ற அறிகுறிகளும் சேர்ந்து காணப்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம் என்று ஆக்ஸ்ஃபர்ட் ஆர்த்தோபெடிக்ஸ் தனியார் மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லெஸ்டர் டான் தியோங் ஜின் கூறுகிறார்.

காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல்சூடு, வீக்கம் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தோள்பட்டையைச் சுற்றி உடல்சூடு, நடுக்கம் மற்றும் வீக்கம் ஏற்படுவது மூட்டுத் தொற்றைக் குறிக்கிறது என்று டாக்டர் டே சொல்கிறார்.

குறிப்புச் சொற்கள்