எஸ்ஜி60 கொண்டாட்டங்களை முன்னிட்டு சிம்ப்ளிகோ நிறுவனம், புதிய ஈஸிலிங்க் அட்டைகளையும் ‘சார்ம்ஸ்’ எனும் கட்டணக் கருவிகளையும் புதன்கிழமை (ஜூன் 25) வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் மக்கள், இடங்கள், அன்றாடத் தருணங்கள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் உணவங்காடிகள் முதல் தேசிய சின்னமான மெர்லயன் வரை சிங்கப்பூரின் பல முக்கிய அம்சங்களை இந்த அட்டைகள் பறைசாற்றுகின்றன.
‘நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்’ என்ற எஸ்ஜி60ன் கருப்பொருளையொட்டி அட்டைகள் வெளியீடு கண்டுள்ளன.
பாரம்பரியம், படைப்பாற்றல், சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கிணைத்து சிங்கப்பூர் அடைந்துள்ள மைல்கல்லையும் அடையாளத்தையும் இவை வெளிப்படுத்துகின்றன.
இவ்வடிவத் தொடர், உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான நான்கு வெவ்வேறு வடிவமைப்பை உள்ளடக்கும்.
ரேய்ன்போ யூனிகோர்ன் ஈஸிலிங்க் அட்டை, மோச்சியாக் மற்றும் ஆவூ எஸ்ஜி60 சிம்ப்ளிகோ ஈஸிலிங் சார்ம்ஸ், ஆ குவா இலஸ்திரேஷன் கிடோஸ் எஸ்ஜி60 ஈஸிலிங்க் அட்டை மற்றும் மிஸ்டர் மெர்லயன் ஈஸிலிங்க் அட்டைகள் அவற்றில் அடங்கும்.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத்தின் ‘ஹேர் ஃபார் ஹோப்’ 2025 நிகழ்ச்சிக்கு சிம்ப்ளிகோ $50,000 நன்கொடை அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இந்த ஈஸிலிங்க் அட்டைகள், ‘சார்ம்ஸ்’ கட்டணக் கருவிகள் மூலம் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தை தனித்துவமாக்கும் தேசிய சின்னங்களையும் நினைவுகளையும் கௌரவிக்கிறோம். அதே நேரத்தில், சமுதாயத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும்,” என்றார் சிம்ப்ளிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் கிம் ஹோங்.
மக்கள் அவற்றை புதன்கிழமை (ஜூன் 25) முதல் கட்டங்கட்டமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
சிம்ப்ளிகோ பயணச்சீட்டு அலுவலகங்கள், சலுகைக் கட்டண அட்டையை மாற்றும் அலுவலகங்கள், எம்ஆர்டி நிலையங்களிலுள்ள பயணிகள் சேவை நிலையங்கள் ஆகிய இடங்களில் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.