கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணமான ‘ஹியூமன் பாப்பில்லோமோ கிருமி (எச்பிவி) பாதிப்பைக் கண்டறியும் சுய-மாதிரி சேகரிப்பு நடவடிக்கையைப் பொது இடத்தில் முதல்முறையாக மேற்கொண்டது சிங்கப்பூர்ப் புற்றுநோய்ச் சங்கம்.
தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (மே 17) நடைபெற்ற பெண்கள் உடல்நல விழாவின் ஒரு பகுதியாக, ‘அலையன்ஸ் ஃபார் ஆக்டிவ் ஆக்ஷன் அகெய்ன்ஸ்ட் எச்பிவி’ (Alliance for Active Action Against HPV) அமைப்புடன் இணைந்து சங்கம் இந்த நிகழ்ச்சியை நடத்தியது.
பெண்களுக்கு எளிதாகவும், தனிப்பட்ட முறையிலும் பரிசோதனை செய்யும் வசதியை வழங்குவதும், விழிப்புணர்வுக்கும் அதற்கான நடவடிக்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதும் இலக்குகள்.
இதில் கலந்துகொள்ள தகுதி பெற்ற பங்கேற்பாளர்களுக்கு, பரிசோதனைக்காகப் பிறப்புறுப்பிலிருந்து மாதிரி அணுக்களைத் தாங்களாகவே எடுக்கும் ‘ஸ்வாப்’ வழங்கப்பட்டது. மாதிரிகள் பின்னர் ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
சிங்கப்பூரின் ‘சொசைட்டி ஃபார் கோல்போஸ்கோபி அண்ட் செர்விக்கல் பேத்தாலஜி’ (Society for Colposcopy and Cervical Pathology of Singapore) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் இந்த அணுகுமுறை, பாரம்பரிய ‘பாப் ஸ்மியர்’, எச்பிவி பரிசோதனைகளுக்கு மாற்றாக, எச்பிவி சுய-மாதிரி பரிசோதனை முறையை முன்வைக்கின்றது.
கூச்சம் அல்லது நேரப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பரிசோதனையைத் தவிர்க்கும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையலாம்.
எச்பிவி என்பது பாலியல் செய்கைகளால் தொற்றக்கூடிய ஒருவகை கிருமித் தொகுப்பு. ஏறத்தாழ இருபது வகைக் கிருமிகள் அதில் அடங்கும். வழக்கமாக, அந்தத் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறி காணப்படுவதில்லை. சிகிச்சை இன்றித் தானாகவே மறைந்துவிடக்கூடிய தன்மையும் அதற்கு உண்டு.
இருப்பினும், பிறப்புறுப்பில் தொற்றும் சில வகை எச்பிவி கிருமிகளால் பெண்களுக்குக் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் உண்டு.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்கள் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இருந்தாலும் இந்தப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. 2007ல் 57.9 விழுக்காடாக இருந்த அது, 2022ல் 43.1% ஆகப் பதிவானது.
இந்தப் போக்கை மாற்ற, சிங்கப்பூர்ப் புற்றுநோய்ச் சங்கமும் ‘அலையன்ஸ் ஃபார் ஆக்டிவ் ஆக்ஷன் அகெய்ன்ஸ்ட் எச்பிவி’ அமைப்பும் பரிசோதனை முறையை எளிமையாக்கியுள்ளன.
“இதுபோன்ற சமூக முயற்சிகள், பெண்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்வதை ஊக்குவிக்கும். வயது ஏற ஏற, புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, பெண்கள் எச்பிவி தடுப்பூசிமூலம் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.
பரிசோதனைகளுக்கு அப்பால், இந்த நிகழ்ச்சியில் ஆரோக்கியம் தொடர்பான உரைகள், புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தோரின் அனுபவப் பகிர்வுகள், நம்பிக்கை வளர்க்கும் குழு கலந்துரையாடல்கள் போன்றவையும் இடம்பெற்றன.
சங்கம், முதன்முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முடிவுகளை மதிப்பிட்டு, எச்பிவி சுய-மாதிரி எடுத்தலை வழக்கமான பரிசோதனைச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.
சங்கத்தின் பீஷான் கிளை (Singapore Cancer Society @ Bishan) அல்லது ‘ஹெல்தியர் எஸ்ஜி’ மருந்தகங்களில் (Healthier SG clinics) இலவசமாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு https://sgcancersociety.info/screening என்ற இணையத்தளத்தை நாடலாம்.