சிங்கப்பூர் எஃப்1 இரவுப் பந்தயம்: ஆவலுடன் ரசிகர்கள்

3 mins read
38f07540-146b-410c-8bab-1f60c5f60577
2008ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன்முறையாக நடத்தப்பட்ட எஃப்1 இரவுநேர கார் பந்தயம், அனைத்துலக அளவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஆண்டுதோறும் ஈர்த்துவருகிறது. - படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ்

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஃபார்முலா ஒன் (எஃப்1) இரவுநேர கார் பந்தயம், செப்டம்பர் 20 முதல் 22 வரை மரினா பே கார் பந்தயத்தடத்தில் நடைபெறவுள்ளது.

2008ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன்முறையாக நடத்தப்பட்ட எஃப்1 இரவுநேர கார் பந்தயம், ஆயிரக்கணக்கான அனைத்துலக ரசிகர்களை ஈர்க்கும் பிரம்மாண்ட நிகழ்வாக மாறியுள்ளது.

கார் பந்தயம் மட்டுமல்லாமல் அனைத்துலகக் கலைஞர்களை உள்ளடக்‌கிய பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் வரும் வார இறுதியில் எதிர்பார்க்‌கலாம்.

இவ்வாண்டின் கிராண்ட் பிரீ விழாவை அனுபவித்துத் திளைக்க ஆவலாகக் காத்திருக்‌கும் சிங்கப்பூர் ரசிகர்கள் சிலர் கருத்து கூறினர்.

“மோசமான வானிலையிலும் 100 கிலோமீட்டர் வேகத்தில் எல்லையைக் கடந்து எஃப்1 கார்கள் ஒன்றையொன்று முந்தி செல்வதைப் பார்க்கும்போது எனக்‌குச் சிலிர்ப்பாக இருக்‌கும்,” என்றார் தொடக்‌கக்‌கல்லூரி மாணவி ஓவியா முத்துக்குமார், 18.

2022ல் சமூக ஊடகங்களில் பரவலாக வலம்வந்த எஃப்1 பந்தயங்களையும் ஓட்டுநர்களையும் பற்றிய காணொளிகள் தன்னைப் பெரிதும் ஈர்த்ததாகச் சொன்ன ஓவியா, தான் மெக்லாரன் அணியின் ரசிகர் என்றும் இவ்வாண்டு அவர்களின் வாகனத்தின் அமைப்பு கடந்த ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளதால் தான் மேலும் உற்சாகம் அடைந்திருப்பதாகவும் சொன்னார்.

“அண்மைய ஆண்டுகளாக ரெட் புல் அணி எஃப்1 போட்டியில் முன்னணியில் இருந்தாலும் கடந்த ஆண்டு அவர்கள் வெற்றி பெறாத ஒரு சில பந்தயங்களில் சிங்கப்பூரின் பந்தயமும் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இவ்வாண்டின் கிராண்ட் பிரீயில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படுவதால் கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்‌கிறேன்,” என்றார் அவர்.

வெவ்வேறு எஃப்1 அணிகளின் குழு உத்திகளும் பந்தயத்தின் கணிக்க முடியாத தன்மையும் அவருக்‌கு மிகவும் பிடிக்‌கும் என்று கூறினார் விண்வெளிப் பொறியியல் பட்டதாரி கணேசன் பிரியதர்ஷிணி, 23.

2011ல் தன் தந்தையுடன் எஃப்1 பந்தயத்தைப் பார்க்க ஆரம்பித்த பிரியதர்ஷிணி, கடந்த ஆண்டிலிருந்து தீவிர ரசிகர் ஆனதாகச் சொன்னார்.

“இந்த பந்தயத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட பிறகு நான் பார்க்கும் முதல் சிங்கப்பூர் எஃப்1 பந்தயம் இதுவே என்பதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மெக்லாரன் அணி முதல் அல்லது இரண்டாம் இடத்தைப் பிடிக்‌க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.

இவ்வாண்டு எஃப்1 நடக்‌கும் கார் பந்தயத் தடத்துக்‌குச் சென்று பந்தயத்திற்கான தயாரிப்புகளை அருகே நின்று பார்க்‌கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் பிரியதர்ஷிணி குறிப்பிட்டார். ‘பிட் லேன் எக்ஸ்பீரியன்ஸ்’ (pit lane experience) வாய்ப்பு, செப்டம்பர் 19ஆம் தேதி 4,500 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்குக் கிட்டும்.

“சகிப்புத்தன்மை, அறிவுத்திறன் ஆகியவற்றுடன் அதிநவீனத் தொழில்நுட்பத்தை எஃப்1 கார் பந்தயத்தை இணைப்பதால் அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது,” என்று தீர்வுகாணும் கட்டடக் கலைஞர் ஷிவா, 35, கூறினார். 2000களின் முற்பகுதியிலிருந்து பந்தயத்தின் ரசிகரான ஷிவா, சிறுவயதிலிருந்து வாகனங்கள்மீது கொண்டிருந்த ஆர்வத்தால் தாம் தூண்டப்பட்டதாகச் சொன்னார்.

“ஓட்டுநர்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் சவாலாக இருக்‌கும் பந்தயங்களில் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பந்தயமும் ஒன்றாகும். சிங்கப்பூரின் குறுகிய வீதிகளும் கடுமையான ஈரப்பதமும் வெப்பமும் ஓட்டுநர்களை அவர்களது ஆற்றலின் வரம்புவரை தள்ளுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் பந்தயம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று ஷிவா நம்புகிறார்.

சிறுவயதிலிருந்து தம் குடும்பத்தினருடன் ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர் எஃப்1 பந்தயத்தை நேரடி ஒளிபரப்பாகத் தொலைக்காட்சியில் காணும் வழக்கம் தனக்‌கு இருந்ததாகவும் பந்தயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் வயதை எட்டியபின் 2018ல் டேனியல் ரிக்கார்டோ, எவரும் எதிர்பாராதவிதமாக மொனாகோ பந்தயத்தைத் தமது சாமர்த்தியத்தாலும் மனவுறுதியாலும் வென்றபோது மேன்மேலும் ஆர்வம் வளர்ந்ததாகவும் சொன்னார் கணினித் தொலைநோக்கு உருவாக்குநராகப் பணிபுரியும் சுபிக்‌‌‌ஷா ராமன், 23.

“ஒரு எஃப்1 ஓட்டுநர் தமது மனத்தை ஒருமுகப்படுத்தி, மன அழுத்தம் தரக்கூடிய தருணங்களில், வெற்றிபெறும் சந்தர்ப்பத்தைத் தமதாக்கிக்கொண்டு திறமையை வெளிப்படுத்தும்போது ஏற்படும் பிரம்மிப்பை அளவிட முடியாது,” என்றார் அவர்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக உலக ஓட்டுநர் கோப்பையை வென்றிருப்பவர் ரெட் புல் அணியைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். அவர்தான் இந்த வருடமும் இதுவரை ஓட்டுநர் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர் பந்தயம் எதிர்பாராவிதமாக அவர் கையிலிருந்து நழுவிவிட்டது,” என்று கூறினார் சுபிக்‌‌‌ஷா. மேலும், இவ்வாண்டின் சிங்கப்பூர் பந்தயத்தில் முதல் இடத்தை யார் பெறுவார் என்று கணிப்பது கடினம் என்றார் அவர்.

ஃபெராரி அணியின் ரசிகரான சுபிக்‌ஷா, இவ்வாண்டின் பந்தயத்தை மத்திய வர்த்தகப் பகுதியிலிருந்து நேரடியாகப் பார்க்க ஆவலாகக் காத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்