சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் மேனாள் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் எழுதிய வாமனத் தீவு (சிங்கப்பூரின் வரலாற்றுத் தொகுப்பு) நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 14ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்தில் நடைபெறவிருக்கிறது.
வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞருமான உலகத் தமிழ் மாமணி திரு. இரா. தினகரன், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிடுவார்.
கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தற்போதைய காலக்கட்டம் வரையிலான பல அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சோழப் பேரரசன் இராஜேந்திரனின் தென்கிழக்காசியப் படையெடுப்பு, சிங்கப்பூரை ஆண்ட மன்னர்கள், சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் வருகை, பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூர், ஜப்பானியப் படையெடுப்பு, சயாம் மரண ரயில்வேயில் தமிழர்கள் சந்தித்த இன்னல்கள், இந்திய தேசிய இராணுவம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வருகை, சிங்கப்பூரின் தன்னாட்சி, திரு. லீ குவான் யூ தலைமையில் மக்கள் செயல் கட்சியின் தோற்றம், 1959 தேர்தலில் அதன் வெற்றி, தமிழவேள் கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும், தமிழ் மொழிக்கு அதிகாரத்துவத் தகுதி, மலேசியாவில் இணைவதற்கான போராட்டம், பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணங்கள், தனி நாடான சிங்கப்பூர் வளர்ச்சியடைய எதிர்நோக்கிய சவால்கள், மூன்றாம் உலக நாட்டின் நிலையிலிருந்து முதலாம் உலக நாட்டின் நிலைக்கு உயர்ந்த சாதனை உள்ளிட்ட பல தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர் வரலாறு பற்றிய இத்தகைய நூல் தமிழ் மொழியில் வெளிவருவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
வெளியீட்டு விழாவின் முக்கிய சிறப்பு தொடக்கத்தில் இடம்பெறும் படவில்லைக் காட்சி, 600 பக்க நூலில் உள்ள தகவல்கள் அரிய நிழற்படங்களுடன் படவில்லைக் காட்சியாக இடம்பெறும்.
சிங்கப்பூரின் 60 ஆண்டு மணிவிழாவை முன்னிட்டு 60 பேர் சிறப்பு நூல்களைப் பெற்றுக்கொள்வர்.
மாலை 5.00 மணிக்குச் சிற்றுண்டியுடன் தொடங்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து இந்த அரிய நூலை வாங்கிப் பயனடையும்படி அனைவரையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

