சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காகப் பட்டியலிடப்பட்ட 69 எழுத்தாளர்களில் 13 தமிழ் எழுத்தாளர்களின் புதினங்கள், புதினம் அல்லாத படைப்புகளுடன் கவிதை நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ஏற்பாட்டில் ‘இலக்கியத் துணுக்குகள்: 2024 சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் தெரிவுபெற்றவர்கள்’ என்ற அந்த நிகழ்ச்சி, இந்திய மரபுடைமை நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
எழுத்தாளர்கள் அழகுநிலா, சந்திரசேகரன் மோகனப்ரியா, இன்பா, கி.சுப்பிரமணியம், கி.கனகலதா, மலையரசி சீனிவாசன், மணிமாலா மதியழகன், முத்தழகு மெய்யப்பன், பொன் சுந்தரராசு, தமிழ்ச்செல்வி இராஜராஜன், வரதராஜன் ஹேமலதா, யூசுப் ராவுத்தர் ரஜித், தாயுமானவன் மதிக்குமார் ஆகியோரின் படைப்புகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இலக்கியப் பரிசு ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் வெளியிடப்படும் படைப்புகளுக்காக வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சி நெறியாளர் து.அழகிய பாண்டியன், எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்த பிறகு ஒவ்வொருவரும் தங்கள் நூலைப் பற்றிய அறிமுகம் செய்ததுடன் படைப்புகளிலிருந்து ஓரிரு வரிகளைப் படித்துக் காட்டினர்.
அறிமுக நிகழ்ச்சியில், பட்டியலிடப்பட்ட நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. நூல்களில் சிலவற்றை வாங்க விரும்புவோருக்காக ‘கியூஆர்’ குறியீட்டு விவரங்களும் காண்பிக்கப்பட்டன.
இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் தேர்வுபெற்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ச்சியில் கிடைத்ததாக உள்ளூர் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான பிரேமா மகாலிங்கம் தெரவித்தார் .
“எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளிலிருந்து சில பகுதிகளை வாசித்தார்கள். அவற்றைக் கேட்டு ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அந்தப் படைப்புகளின் பின்னணிகளையும் தெரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு வழிவகுத்தது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதவேண்டும், சிங்கப்பூரின் பலதரப்பட்ட சமூகச் சிக்கல்களை எதிரொலிக்கும் குரல்களாக அவர்கள் திகழவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் நிர்வாக இயக்குநர் வில்லியம் புவான், சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் வெற்றியாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி வருகையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
விக்டோரியா அரங்கில் செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விருது நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


