மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அண்மையில் மலேசிய எழுத்தாளர்கள், மாணவர்கள், அனைத்துலகப் பிரிவில் பிறநாட்டு எழுத்தாளர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டியினை நடத்தியது.
தமிழின மரபு, பண்பாட்டைத் தாங்கிய இவ்வாண்டிற்கான போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, வெற்றி பெற்ற சிறந்த கதைகள் ‘38ஆவது பேரவைக் கதைகள்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சி 2024 டிசம்பர் 14ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தின் அங்சானா அரங்கில் நடைபெற்றது.
அனைத்துலகப் பிரிவில் சிறந்த மூன்று சிறுகதைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது எழுதிய செம்பெருமீன் சிறுகதையும் அவற்றில் ஒன்று. அவருக்கு விருதுடன் ஆயிரம் வெள்ளி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
கதைகளை ஆய்வுசெய்து பேசிய மலாயாப் பல்கலைக்கழக மொழியியல் துறையின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக ஒற்றுமை போன்ற முக்கிய கருத்துக்களை வலியுறுத்தும் சிறுகதை செம்பெருமீன். பூமியின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய சிந்தனை அறிவியல் கற்பனைக் கதையாக அது அமைந்துள்ளது,” எனப் பாராட்டினார்.
எழுத்தாளர் மில்லத் அகமது தான் எழுதிய, தொகுத்த நூல்களை பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்திற்கு வழங்கினார்.