தமிழ் மொழியின் செழுமையும், இளைய தலைமுறையின் திறமையும் சந்தித்த ஓர் இனிய நிகழ்ச்சியாக அமைந்தது சிங்கப்பூர்த் தமிழ்ப் புத்தகத் திருவிழா.
மே மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, எண் 100, விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த பிளாஸா’ கீழ்த்தளத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக இளையர் பிரிவு உறுப்பினர்களின் படைப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர்கள் தயாரித்த ‘நூலா டிக்டாக்கா?’ என்ற கதாகாலட்சேப நாடகம், நகைச்சுவையோடு சிந்தனைக்கூறுகளை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
இந்நாடகம், தமிழ் இலக்கியத்தின் வளங்களை இன்றைய டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் எவ்வாறு புதுமையாகப் பகிரலாம் என்பதை விளக்கும் விதமாக, சுவையான படைப்பாக அமைந்ததாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்த அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
கழகத்தின் இளையர் பிரிவினர் இந்நாடகத்தை எழுதித் தயாரித்தனர். பல நாள்கள் மாலை வேளைகளில் அயராது, ஊக்கத்துடன் அவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இத்திருவிழாவில் மற்றுமொரு சுவையான அம்சம், இலக்கிய நிகழ்ச்சிகள் குறளோடு விளையாடு, கொக்கரக்கோ, சின்னக் குரல்கள், பெரிய கதைகள், கவியரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீடுகள், துவக்க விழா, நிறைவு விழா எனப் பல நிகழ்ச்சிகளை இளையர் பிரிவு உறுப்பினர்கள் நெறியாள்கை செய்தனர்.
பலருக்கும் இது முதல் அனுபவமாக இருந்தபோதும் அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தினர். அவர்களின் திறமையான படைப்புப் பாணியும் பார்வையாளர்களுடன் ஏற்படுத்திய நேரடித் தொடர்பும், விழாவின் ஒட்டுமொத்தத் தரத்தை உயர்த்தியது.
தொடர்புடைய செய்திகள்
இளைய தலைமுறை இலக்கியத்தை முன்னெடுக்கவேண்டும் என்ற உறுதியுடன் செயல்படும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், இளம் எழுத்தாளர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்கி, அவர்களது வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
இந்த ஆண்டின் எஸ்ஜி60 தமிழ்ப் புத்தகத் திருவிழா, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்காக இளையர்கள் எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திய நிகழ்ச்சியாக அமைந்தது.
தகவல்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்