சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடலுறுதி விழா (Singapore Urban Sports + Fitness Festival) இவ்வாண்டு நவம்பர் மாதம் 15 முதல் 30ஆம் தேதிவரை மூன்று வாரயிறுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆண்டாக நடைபெறவுள்ள இவ்விழாவிற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து 80,000 பேர் பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏறத்தாழ 20 பங்காளிகளுடன் சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் இணைந்து நடத்தும் இவ்விழாவில் சிங்கப்பூர் எக்ஸ்போ, சோமர்செட், டெம்ப்ஸி ஆகிய வட்டாரங்களில் உள்ள விளையாட்டரங்கம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் விளையாட்டு, உடற்பயிற்சிகளுடன் சமூகப் பிணைப்பையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டுள்ளன.
முதற்கட்டமாக 12 பங்காளி அமைப்புகளை அறிமுகம் செய்யு நிகழ்ச்சி ஆகஸ்ட் 16ஆம் தேதி சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் உள்ள ‘ஓசிபிசி ஸ்குவேரில்’ நடைபெற்றது.
சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடலுறுதி விழா 6060 எனும் சவாலில் 5,000 பேர் பங்கேற்றதுடன் ஒட்டுமொத்தமாக 6,060 சுற்றுகள் எனும் எண்ணிக்கையில் சுவர்ப் பந்து, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
பல்வேறு வகை விளையாட்டுகளுடன் பெண்களின் உடலுறுதியைக் கொண்டாடும் வகையில் அமைந்த ‘த பட்டர்ஃபிளை எஃபெக்ட்’ எனும் இயக்கம் அறிமுகம் கண்டது. அனைத்துலக அளவில் பிரபலமான இந்த விளையாட்டு ஆசியாவிலேயே சிங்கப்பூரில் மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ‘ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரீம்ஸ்’ விழா இதில் பங்களிப்பதுடன் ‘ரோலர்பிளேடு’, ‘ஸ்கேட்போர்டு’ எனப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும், பயிலரங்குகளையும் நடத்தவுள்ளது.
இளையர் மத்தியில் நகர்ப்புற விளையாட்டு, உடற்பயிற்சிப் போட்டிகள் பிரபலமடைந்து வருவதைப் பயன்படுத்தி, உள்ளூர்ச் சமூகங்களின் ஈடுபாட்டையும் பங்கேற்பையும் அதிகரிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.