சிங்கப்பூரின் முக்கியப் பன்மொழி இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, இவ்வாண்டு நவம்பர் 7 முதல் 16 வரை ‘வருங்காலப் பொருள்களின் உருவம்’ (Shape of Things to Come) எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கிறது.
‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ ஏற்பாட்டில் 28வது முறையாக நடைபெறும் இந்த விழா, கதைசொல்லலின் ஆற்றல்மூலம் பார்வையாளர்களை வருங்காலத்தைப் பற்றிக் கனவு காணவும், கேள்விகள் எழுப்பவும் அழைக்கிறது.
மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளுடன் ஏனைய உலக மொழிகளின் இலக்கியங்களையும் இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடுகிறது.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட சிங்கப்பூர், வெளிநாட்டுப் படைப்பாளர்கள் பங்கேற்கும் இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில் இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தமயந்தி, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
தமிழ்மொழியின் தொன்மையான மரபையும் அதன் துடிப்பான சமகாலப் பரிமாணங்களையும் பறைசாற்றும் வகையில், இவ்வாண்டு மொத்தம் ஒன்பது நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கவிதை சொல்லும் கதைகள் (நவம்பர் 8)
கவிமாலை சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து வழங்கப்படும் இந்தக் கலந்துரையாடல், சமகாலக் கவிதைகளுக்கும் கதைகளுக்குமான இணைகோடுகளை ஆராய்கிறது.
இன்பா, ராஜு ரமேஷ், சுருதிகா குமார் ஆகியோர் நெறியாளர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி, சமகாலக் கருப்பொருள்களை இலக்கிய வகைமைகளில் எவ்வாறு அணுகலாம் என்பதை அலசுகிறது.
தொடர்புடைய செய்திகள்
யாதும் ஊரே: மொழிபெயர்ப்பின் வழியே உலக இலக்கியம் (நவம்பர் 8)
‘சிராங்கூன் டைம்ஸ்’ சஞ்சிகையுடன் இணைந்து வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, புனைகதைகள், அல்புனைவுகள், கவிதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பதன் சவால்கள், முக்கியத்துவம், பண்பாட்டுப் பரிமாற்றம் முதலியவற்றை ஆழமாக ஆராயும்.
நீலகண்டன் சிவானந்தம், ஷாநவாஸ், மஹேஷ் குமார், லதா அருணாச்சலம் போன்றோர் உலகளாவிய குரல்களைத் தமிழ்ச் சூழலுக்குள் கொண்டுவரும் புதிய வழிகளைப் பற்றி பேசுவர்.
கவிப்பெருக்கு — பெரிதினும் பெரிது கேள் (நவம்பர் 9)
கவிஞர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கவிநயம், மொழிவளம், குரல்வளம் ஆகியவற்றின்வழி இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து தங்கள் படைப்புகளை நேரடியாகப் பார்வையாளர்களுக்கு வழங்குவர்.
எங்கே இந்த ரோசி?: தீவைச் சுற்றி ஒரு புதையல் வேட்டை (நவம்பர் 9)
‘கிரியேட் எஸ்ஜி’ நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் இந்தப் புதையல் வேட்டை நிகழ்ச்சியான இதில் சிறார்களும் பெற்றோரும் இணைந்து லிட்டில் இந்தியா, சைனாடவுன், கம்போங் கிளாம் போன்ற இடங்களில் சுற்றி குறிப்புகளைத் தேட வேண்டும். வழியில், புதிய தமிழ்ச் சொற்கள், வேற்றுமை உருபுகளைப் பற்றி அறிந்துகொள்வதோடு சிங்கப்பூரின் மரபுடைமைச் சின்னங்களையும் கண்டறியலாம்.
கடல் தாண்டிய கதைகளும் கலாசார அடையாளமும் (நவம்பர் 9)
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இணைந்து வழங்கப்படும் இந்நிகழ்ச்சி புலம்பெயர் எழுத்தாளர்களின் கதையாடலை மையப்படுத்துகிறது. இருவேறு பண்பாடுகளுக்கு இடையே வாழும் அனுபவம் ஒரு படைப்பாளியின் எழுத்தை எப்படி வடிவமைக்கிறது என்பது ஆராயப்படும்.
அழகுநிலா, சூரியரத்னா, தமயந்தி ஆகியோர் தங்கள் கதைகளைப் பற்றி விரிவாகப் பேசுவர்.
நாவல்களின் நகர்வுகள்: சிங்கப்பூர் தமிழ் நாவல்களின் வரலாறும் வருங்காலமும் (நவம்பர் 15)
மாயா இலக்கிய வட்டத்துடன் இணைந்து வழங்கப்படும் இந்தக் கலந்துரையாடல், சிங்கப்பூர்த் தமிழ் நாவல்களின் 60 ஆண்டுகால வரலாற்றை ஆராய்கிறது.
ரமா சுரேஷ், கணேஷ் பாபு, சர்வான், நீலகண்டன் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழில் நடைபெறும் இந்நிகழ்ச்சி உடனடியாக நேரடி மொழிபெயர்ப்பாக பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
கலாசாரங்களை ஒன்றிணைத்தல்: சிங்கப்பூரின் கதையைச் சொல்லும் இசை (நவம்பர் 15)
இந்தச் சிறப்புரை நிகழ்ச்சியில் சிங்கப்பூர் இசையமைப்பாளரான ஷபீர் சுல்தான், இசை எவ்வாறு பண்பாட்டுப் பாலமாகச் செயல்படுகிறது என்பதைத் தனிப்பட்ட அனுபவங்கள், இசைச் சான்றுகள் மூலம் விளக்குவார். இந்நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் தமிழிலும் நடைபெறும்.
ஊக நுண்புனைவுக் கதைப் பயிலரங்கு (நவம்பர் 15)
ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்டத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் பயிலரங்கில் பங்கேற்பவர்கள், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த வரலாற்று மாந்தர்களாக நடித்தும் நுண்புனைவுகளைப் படைத்தும் வரலாற்றை மறுகற்பனை செய்யலாம்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜ், கலைவாணி இளங்கோ, கங்கா பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை வழிநடத்துவர்.
தமிழ் ஊகப்புனைவு குறித்த உரையாடல் (நவம்பர் 16)
ஆசியப் படைப்பிலக்கிய எழுத்துத் திட்ட ஆதரவுடன் நடைபெறும் இந்தக் கலந்துரையாடல் கனவுருப்புனைவு தமிழில் அதன் பழங்கால இதிகாசங்கள் முதல் நவீன வடிவங்கள்வரை எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை ஆராயும்.
ச. மோகனப்ரியாவும் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
மேல்விவரங்கள்
அனைத்துலகக் குரல்களிலிருந்து உள்நாட்டுத் திறமைகள்வரை, தேசிய பிரதிபலிப்பிலிருந்து அனுமான எதிர்காலம்வரை, இந்த ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பார்வையாளர்களை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா பிளேகிரவுண்ட் (SWF Playground), சீ எக்ஸ்சேஞ்ச் (SEA xChange), இளையர் ஃபிரிஞ்ச் (Youth Fringe), சிங்கப்பூர் எழுத்தாளர் விழா வகுப்பறை, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இன் கன்ஜங்ஷன் (SWF In Conjunction) போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளும் புதிய வடிவில் திரும்புகின்றன.
சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் வரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் எடுத்தியம்பும் கதைகளை ‘எஸ்ஜி60 ஹோமேஜ்’ நிகழ்ச்சி வழங்கும்.
விழா நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை www.singaporewritersfestival.com என்ற இணையத்தளம் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். விழா குறித்த கூடுதல் விவரங்களையும் அதில் காணலாம்.