சிங்கப்பூரர்களில் ஏறத்தாழ 48 விழுக்காட்டினர் தங்கள் விடுமுறை நாள்களை ஓய்வெடுக்கவும், மனஅமைதி பெறவும் பயன்படுத்துவதாக அண்மைய ஆய்வு கூறியுள்ளது.
குறிப்பாக, ஒரு புதிய ஆண்டை அமைதியாகத் தொடங்க விரும்புவோர் புத்தாண்டு விடுமுறைக் காலத்தின்போது பயணம் மேற்கொண்டு புத்துணர்ச்சியுடன் பணிக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது.
புத்தாண்டைக் கோலாகலமாக, இரவு முழுதும் நண்பர்களுடன் செலவிட்டுத் தொடங்குவோர் ஒருபுறம் இருந்தாலும், ஆண்டு முழுதும் நடந்தவற்றை மறந்து, வரும் ஆண்டை நேர்மறை எண்ணங்களுடன் தொடங்கவும், விடுமுறை வாய்ப்பினைத் தனியாகவோ தங்கள் குடும்பத்துடனோ கொண்டாடும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் பயணிகள் அதிகம் தேடிய விடுமுறை இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ‘புக்கிங் டாட் காம்’ நிறுவனம்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஏறத்தாழ 800 பயண ஆர்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், வியட்னாம், மலேசியா, தாய்லாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அமைதியான, மலைகள், மரங்கள் என இயற்கை சூழ்ந்த இடங்களுக்குச் செல்ல விரும்புவோர் அதிகரித்துள்ள நிலையில், அதனை ஈடுசெய்யும் விதமாக அமைந்த வியட்னாம் நாட்டின் டா நாங் நகர் (Da Nang) முதலிடம் பெற்றுள்ளது.
குகைகள், 70 அடி உயர புத்தர் சிலை (Lady Buddha) ஆகியவை அந்நகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. தவிர, கடற்கரையும் இருப்பது அந்நகரைச் சிங்கப்பூரர்கள் விரும்ப முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், குடும்பம், சிறு குழந்தைகளுடன் செல்ல ஏதுவான இடம் என்பதும் அதன் தனிச்சிறப்பு.
பரபரப்பான, துடிப்புமிக்க இரவுகளைக் கொண்டாட விரும்புவோர்க்கு ஏற்ற இடமாக ஒருபுறமும், அழகிய கடற்கரைகளுடன் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடமாகவும் திகழும் தாய்லாந்து நாட்டின் புக்கெட் (Phuket) நகரம் சிங்கப்பூரர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நை தோன் (Nai Thon), லயன் (Layan) உள்ளிட்ட கடற்கரைகளில் நீந்தி விளையாடுவது உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்வு அளித்து, பரபரப்பான வேலை வாழ்க்கைக்குத் தங்களை மீண்டும் தயார்செய்ய உதவுவதாக சுற்றுப்பயணிகள் கருதுகின்றனர்.
மிதமான சூரிய ஒளியில் காய்வது, மாலை நேர நடை உள்ளிட்டவை இங்கு வரும் சுற்றுப்பயணிகளின் விருப்பமாக இருக்கிறது.
மேலும், அனைத்துலக அளவில் அதிகம் அறியப்படாதவையாக இருக்கும் பல்வேறு தாய்லாந்து உணவு வகைகளைச் சுவைப்பது, விடுமுறை மனநிலையை மேலும் குதூகலமாக்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அமைதியான, ஆன்மிகச் சுழலுக்குப் பெயர்போன இந்தோனீசிய நகரின் பாலித்தீவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. புரா, தமன் சரஸ்வதி உள்ளிட்ட கோவில்களில் நேரம் செலவிடுவது, மன நிம்மதியைத் தருவதாகப் பலர் கருதுகின்றனர். தொடர்ந்து, உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டோருக்கு குறைந்த நாள்கள் நடக்கும் பயிலரங்குகளும் உண்டு.
சாகச விரும்பிகளுக்கான விளையாட்டுகள், சூரிய உதயத்தைக் காண ‘மவுண்ட் படூர்’ மலையேற்றம் உள்ளிட்டவை விடுமுறைக் கொண்டாட்டத்தை இருமடங்காக்குகின்றன.
இவை தவிர, கோலாலம்பூர், பேங்காக், தோக்கியோ நகரங்களும் சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்பும் விடுமுறைப் பயணத் தெரிவுகளில் இடம்பெற்றுள்ளன.