சிங்கப்பூர் கலை வாரத்தின் ஒரு பகுதியாக ‘அலிவால் நகர்ப்புறக் கலை விழா’ (The Aliwal Urban Arts Festival) அலிவால் கலை நிலையத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இடம்பெறவுள்ளது.
‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, கம்போங் கிளாமை நகர்ப்புறக் கலை, தெருமுனை கூட்டத்தின் பழக்கவழக்கங்கள், இன்றைய இளையர்களின் கலாசாரம் முதலியவற்றை உள்ளடக்கிய மையமாக மாற்றி அமைக்கவுள்ளது. அனைத்து வயதினரும் பங்கேற்கக்கூடிய வகையில் பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
‘டெய்லர்ட்: போர் & ஸ்ட்ரோக்’ (TAILORED: Bore & Stroke) என்று பெயரிடப்பட்ட புதிய கண்காட்சி ஒன்று விழாவில் இடம்பெறும். இது வாகனங்களின் தனிப்பயன் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நகர்ப்புறக் கலை, வடிவமைப்பு, ஃபேஷன் ஆகியவற்றிலுள்ள ஆக்கபூர்வமான நடைமுறைகளுக்கு இடையே உள்ள குறுக்குவெட்டுகளை ஆராயும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ‘த பிளாக் ஏ கலெக்டிவ்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கலைஞர்களும் அவர்களின் படைப்புகளும் இடம்பெறும்.
‘த பிக் ரெட் நோஸ்’, ‘த குட்நைட் கேங்’- இன் ஏர்பிரஷிங், போஸ்டர் வடிவமைப்பு பயிலரங்குகளிலும் வருகையாளர்கள் கலந்துகொள்ளலாம்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்டூடியோ மூன்சைல்ட், தாய்லாந்தைச் சேர்ந்த மௌய், வாரிஸ், பிலிப்பீன்சைச் சேர்ந்த ஸ்பாஸ் போன்ற வட்டார நகர்ப்புறக் கலைஞர்கள் சுவரோவியங்களை நேரலையில் உருவாக்குவதையும் மக்கள் கண்டு களிக்கலாம். விழாவின் ஓர் அங்கமாக வருகையாளர்கள் ‘கிராஃபிட்டி ஸ்ப்ரே பெயிண்டிங்’ செய்து பார்க்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
அலிவால் கலை நிலையத்தின் கலைஞர்களாலும் அவாந்த் தியேட்டராலும் நடத்தப்படும் பயிலரங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவை விழாவில் இடம்பெறும். கம்போங் கிளாமில் அமைந்திருக்கும் சுவரோவியங்களின் பின்னணியை விளக்கும் நடை சுற்றுலாக்களிலும் மக்கள் பங்கேற்கலாம்.
‘ஸ்கேட்போர்டிங்’ விளையாட்டில் முதல்முறையாக ஈடுபட விரும்புவோருக்கு விழாவில் வாய்ப்பு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அலிவால் கலை நிலையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் ஸ்கேட்எஸ்ஜியின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் ஸ்கேட்போர்டிங் போட்டியையும் மக்கள் நேரடியாகப் பார்க்கலாம்.
‘கிரியேட்டர்ஸ் மார்க்கெட்பிளேஸ்’, என்ற கலைச் சந்தையில் விதவிதமான கைவினைப் பொருள்களையும் தனிப்பயனாக்கப்பட்ட பொருள்களையும் மக்கள் எதிர்பார்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அனைவரும் ரசிக்கும் விதத்தில் பல்வேறு தனித்துவமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெறவுள்ளன.
‘கல்பவ்ரிக்ஷா ஃபைன் ஆர்ட்ஸ்’ (Kalpavriksha Fine Arts) கலைஞர்களின் பரதநாட்டியம், கதக் நடன மேடை நிகழ்ச்சியையும் ‘சௌக் புரொடக்ஷன்ஸ்’ (Chowk Productions) கலைஞர்களின் ஒடிசி நடன மேடை நிகழ்ச்சியையும் மக்கள் விழாவில் கண்டு ரசிக்கலாம். மேல்குறித்த இந்திய நடன வகைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர் இரு அமைப்புகளும் நடத்தும் நடனப் பயிலரங்குகளில் பங்கேற்கலாம்.
அனுமதி இலவசம். ஒருசில நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு தேவை. மேல்விவரங்களுக்கு https://artshouselimited.sg/aac-auaf-2025 என்ற இணையத்தளத்தை நாடலாம்.