இலக்கிய உலகின் ஆக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கர் பரிசை வெல்லும் வெற்றியாளர் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் ஆறு நூல்கள் இடம்பிடித்துள்ளன.
கன்னட மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலும் இந்த ஆண்டிற்கான பட்டியலில் உள்ளது.
இதுகுறித்த விவரங்களை ஏப்ரல் 8ஆம் தேதியன்று வெளியிட்ட விருது ஏற்பாட்டாளர்கள், இந்த ஆண்டு பரிசுக்கான இறுதிப் பரிந்துரையில் இடம்பிடித்திருக்கும் மற்ற நூல்கள் குறித்த தகவல்களையும் வெளியிட்டனர்.
நகைச்சுவை மேலோங்கக் கூறப்பட்டுள்ள பெர்லினில் வாழ்க்கை நடத்தும் புலம்பெயர்ந்தவரின் கதை, கால இயந்திரத்தில் சிக்கும் தொல்பொருள் நூல் விற்பன்னரின் கதை உள்ளிட்ட ஆறு தலைப்புகளில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்குப் பல நூல்கள் போட்டியிடுகின்றன.
மேலும், தென்னிந்திய மொழிகளில் ஒன்றான கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘ஹார்ட் லாம்ப்’ எனும் நூலும் 2025ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை வெல்லப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
குடும்பம், சமூகப் பதற்றங்களுக்கிடையே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் அன்றாட வாழ்வியல் சார்ந்த பதிவுகளைச் சிறுகதைகளாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
வின்சென்ஸொ லாட்ரோனிகோ (Vincenzo Latronico) இத்தாலிய மொழியில் எழுதிய ‘பர்ஃபெக்ஷன்’ எனும் நாவலும் 2025ஆம் ஆண்டிற்கான அனைத்துலக புக்கர் பரிசுப் போட்டியில் இடம்பெற்றுள்ளது. இதனை மொழிபெயர்த்த பிரிட்டிஷ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சோஃபி ஹியூக்ஸ் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு ஹியூக்ஸ் தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறை.
50,000 யூரோ பரிசுத் தொகையுடன் வரும் அனைத்துலக புக்கர் பரிசை வெல்லப்போவது யார் என்பது குறித்த விவரம் வரும் மே மாதம் 20ஆம் தேதி தெரிந்துவிடும்.
வெற்றி பெற்ற எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.