அடிப்படைக் கல்வி பெற்றுத்தரும் பணிவாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறவும் வாழ்விலும் பதவியிலும் அடுத்த கட்டத்துக்கு நகரவும் திறன் மேம்பாடு இன்றியமையாதது.
சிங்கப்பூரில் உள்ள 95 விழுக்காட்டு ஊழியர்களால் தங்கள் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க இயலவில்லை என்கிறது ‘லிங்க்ட்இன்’ (LinkedIn) எனும் தொழில் வல்லுநர்களுக்கான சமூக ஊடக நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு.
ஏறத்தாழ 35 விழுக்காடு ஊழியர்கள், தங்களைத் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த நிறுவனம் ஊக்குவிப்பதாகவே கூறியுள்ளனர்.
எனினும், பணிச்சுமை, தனிப்பட்ட மற்றும் குடும்பப் பொறுப்புகள், உடற்சோர்வு, நேரமின்மை, ஊக்கமில்லாமை எனப் பல்வேறு காரணங்களால் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என ஊழியர்கள் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘லவுட் லேர்னிங்’
வேலையிடங்களில் பரவலாகக் காணப்படும் ‘லவுட் லேர்னிங்’ அணுகுமுறை ஊழியர்களுக்கு வெற்றி அளிக்க வல்லது என்று கூறப்படுகிறது.
ஊழியர்கள் தங்களது வேலையிடத்தில் நிகழும் கற்றல் குறித்து வெளிப்படையாகவும் இலக்குடனும் நடந்துகொள்வதை இது குறிக்கும்.
குறிப்பாக, சிங்கப்பூரில் ஊழியர்கள் தாங்கள் கற்கும் புதிய திறன்கள் குறித்து சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல், அவை குறித்து லிங்க்ட்இன்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடுதல், கற்றல் பயணத்திற்கான நேர ஒதுக்கீடு குறித்து பிறரிடம் விளக்குதல் உள்ளிட்ட செயல்கள் மூலம் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதாக இந்த ஆய்வு கூறியுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள ஊழியர்களில் 31 விழுக்காட்டினர் இத்தகைய செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளதையும் இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த ‘லவுட் லேர்னிங்’ முறை அனுபவமிக்க நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கவும், பதவி உயர்வு குறித்த நம்பிக்கையைப் பெறவும் ஊழியர்களுக்கு உதவுவதாக சிங்கப்பூரைச் சேர்ந்த 56 விழுக்காட்டுத் தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு
‘லிங்க்ட்இன்’ நிறுவனத் தரவுகளின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு பணிக்குத் தேவையான திறன்கள் 50 விழுக்காடு வரை மாறுபடலாம் என்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் சிங்கப்பூரில் இம்மாற்றத்தை 72 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
தொழிநுட்ப வளர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் கற்றலைத் துரிதப்படுத்த ஏதுவாக, ‘லிங்க்ட்இன்’ இலவச கற்றல் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கிக் கற்றல் பயணத்தைக் தொடங்கவும், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட எல்லா கருத்துகளின் மீதான நேர்மறைக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும், சக ஊழியர்கள், நண்பர்களுடன் இணைந்து கற்றல் பயணத்தை மேற்கொள்ளவும் லிங்க்ட்இன் ஊக்குவிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் துணையுடன் ஒரு துறை வல்லுநரைக் கண்டறியவும் அத்துறையின் வளர்ச்சி, புதிய உத்திகள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யவும் லிங்க்ட்இன் கருவிகள் வழிவகுக்கின்றன.

