எப்போதும் பரபரப்பாக இருக்கும் நம்மில் பலர் சில வேளைகளில் ஓய்வு எடுப்பதற்குப் போதிய நேரம் ஒதுக்கத் தவறுவதுண்டு.
அதனால், பணத்தைச் சேமிப்பதுபோல தூக்கத்தையும் முன்கூட்டியே சேமித்து வைத்து, நேரம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும் எனப் பலரும் நினைக்கலாம்.
அவர்களுக்கு ஒரு நற்செய்தி! ‘ஸ்லீப் பேங்கிங்’ எனப்படும் உறக்கத்தைச் சேமிக்கும் பழக்கமானது பரபரப்பான வாழ்க்கைக்கும் மேம்பட்ட நலத்திற்கும் ஒரு பாலமாக விளங்குகிறது.
ஆராய்ச்சியாளர்கள், உறக்க வல்லுநர்களைப் பொறுத்தவரை உறக்கச் சேமிப்பு என்பது தவிர்க்க முடியாத தூக்கமின்மையிலிருந்து ஒருவரின் உடல் மீண்டுவர உதவக்கூடிய உண்மையான, அறிவியல்பூர்வமான ஓர் அணுகுமுறையாகும்.
‘வால்டர் ரீட்’ தேசிய ராணுவ மருத்துவ மையத்தின் ஆய்வுகள் மற்றும் முன்னணி உறக்க வல்லுநர்களின் ஆதரவைப் பெற்ற இந்தச் செயல்முறை தூக்கக் குறைபாட்டை சரிசெய்வதற்காக தற்போது அதிகம் பேசப்படும் தீர்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
அலுவலகப் பயணம், இரவு முழுவதும் கண்விழித்தல், பிறந்த குழந்தையைக் கவனித்துக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள தூக்கமின்மையைச் சமாளிக்க முன்கூட்டியே கொஞ்சம் அதிகமாகத் தூங்கிவைப்பதே இதன் நோக்கமாகும்.
இப்படிச் செய்வதன் மூலம் ஒருவர் தூக்கமில்லாமல் தவிக்கும்போது உடல் அதை எளிதாகச் சமாளிக்கும்.
தூக்கமின்மையைச் சந்திக்கும் தறுவாய்க்கு முன்பாக அன்றாடம் ஒரு மணி நேரம் கூடுதலாகத் தூங்கி அதனைச் சேமித்து வைப்பவர்கள் அப்படிச் செய்யாதவர்களைவிட மூளைத்திறனிலும், நிலையான மனநிலையிலும், விரைந்து செயல்படுவதிலும் சிறந்து விளங்குவதாக அமெரிக்க ராணுவத்தின் ஆய்வு உட்பட கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
உறக்கச் சேமிப்பு பற்றித் தெரிந்துகொள்ளுமுன், ‘தூக்கக் கடன்’ பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
அதாவது, உடலுக்குத் தேவைப்படும் தூக்கத்திற்கும், ஒருவருக்குக் கிடைக்கும் தூக்கத்திற்கும் உள்ள இடைவெளியே தூக்கக் கடன் எனப்படுகிறது.
அன்றாடம் ஒருவருக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியமாக இருக்கும்போது அவர் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்கினால் நாளும் இரண்டு மணி நேர தூக்கத்தை அவர் கடனாகச் சேர்க்கிறார்.
இதனைத் தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் மூளையின் செயல்பாட்டுத் திறன் குறைதல், கவனமின்மை, நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.
தூக்கமில்லாத நிலையை எதிர்கொள்ளும்போது, உடல், மனம், உணர்வு சார்ந்து ஒருவரின் மீள்திறனை அதிகரிக்க முன்கூட்டியே சில நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 90 நிமிடங்கள் கூடுதலாக உறங்கி, தூக்கத்தைச் சேமிப்பது பெரிதும் உதவும்.
உறக்கச் சேமிப்பு தற்காலிகமாகப் பலனளித்தாலும் அது நாள்தோறும் நன்கு உறங்கி எழுவதற்கு ஈடாகாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதனால், ஒவ்வோர் இரவும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை சீரான, தரமான தூக்கத்தைப் பெறுவதையே எப்போதும் முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

