வேலைக்குப் பிறகு நண்பர்களுடன் வெளியில் செல்வது, இரவு நேரத்தில் குதூகலமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது ஆகியவற்றில் மூழ்கியிருந்த சிலர், இப்போது சீரான உறக்கத்தைப் பெற பல வழிகளை நாடி வருகின்றனர்.
அவற்றில் ஒன்று, உறக்கப் பயிற்சியாளரிடம் செல்வது. ஒரு காலத்தில் குழந்தைகளை நன்கு தூங்க வைக்க பெற்றோர் உறக்க நிபுணர்களை நாடி வந்தனர்.
ஆனால், இப்போது வேலைக்குச் செல்பவர்கள், உறக்கமின்மை, பதற்றத்தால் அவதிப்படுவோர், ஓய்வுபெற்றவர்களும்கூட உறக்கப் பயிற்சியாளர்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது.
நிபுணத்துவம் பெற்ற உறக்க ஆலோசகர்கள், தனிப்பயனாக்கப்பட்ட படுக்கை நேர வழக்கங்கள் முதல் உறக்கமின்மைக்கான சிகிச்சை வரையிலான திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
“சீரான உறக்கம் கிடைப்பது ஒரு சொகுசன்று. மனநலத்திற்கும் நோயெதிர்ப்பாற்றலுக்கும் தேவையான அடிப்படையே நல்ல உறக்கம்தான். உறக்க மாத்திரைகளை உட்கொண்டும் உறக்கமின்மையால் பாதிக்கப்படுவோர் பலர் என்னிடம் வருகிறார்கள்,” என்றார் நியூயார்க்கைச் சேர்ந்த உறக்க நிபுணர் எமிலி ரெய்ன்ஸ்.
பயிற்சி பொதுவாக விரிவான உறக்கத் திட்டத்துடனும் ஆலோசனையுடனும் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, வடிவமைக்கப்பட்ட திட்டத்தில், ஒளி வெளிப்பாட்டு உத்திகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள், திரை நேரத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
சில நேரங்களில் இன்னும் ஆழமாகச் சோதிக்க சிலர் மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரைக்கப்படுவர்.
உறக்கப் பயிற்சி நீண்ட காலத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் செயல்படும். அது மாத்திரைகளை சாப்பிடுவது போலன்று. அதன் விளைவுகள் ஒருவருக்குச் சிறந்த மாற்றத்தையும் அளிக்கும்.
“நான் அதிகாலை மூன்று மணிவரை தூங்காமல் வேலை பார்த்துக்கொண்டிருப்பேன். ஆனால், உறக்கப் பயிற்சியாளரை நாடிய பிறகு நான் இப்போது நள்ளிரவுக்குள் தூங்க சென்றுவிடுகிறேன்,” என்றார் வரைகலை வடிவமைப்பாளர் மாயா சென், 34.
வேலைக்குச் செல்பவர்கள் உறக்கப் பயிற்சி குறித்து இணையத்தில் தேடுவது கடந்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக ‘அமெரிக்க அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின்’ தெரிவிக்கிறது.
பல நிறுவனங்கள் $300ல் இருந்து, $1,500 வரையிலான கட்டணத்தில் பல உறக்கப் பயிற்சித் திட்டங்களை வழங்குகின்றன. இருந்தாலும், இத்துறை இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பது விமர்சகர்களின் கருத்து.