தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்திற்குப் பங்களித்த எஸ்எம்ஆர்டி நிறுவனம்

2 mins read
1af0a693-85be-4569-b0eb-504cd97882da
மூத்தோருக்கு உதவும் எஸ்எம்ஆர்டி ஊழியர்கள். - படம்: எஸ்எம்ஆர்டி 

சமூகத்தில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், மூத்தோர், உடற்குறையுள்ளோர்க்கு உதவும் ‘கம்போங் செனாங் அறக்கட்டளையின்’ நிதிதிரட்டு நிகழ்ச்சிக்குப் (Kampung Senang Charity Concert) பங்களித்துள்ளது எஸ்எம்ஆர்டி நிறுவனம்.

‘கம்பங் செனாங் அறப்பணி, கல்வி அறநிறுவனம்’ சார்பில் கடந்த ஜனவரி 4ஆம் நாளன்று $200,000 நிதி திரட்டும் இலக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவன மூத்த நிர்வாகிகளும் ஊழியர்களும் பங்களித்தனர்.

தனித்துவிடப்பட்ட மூத்தோர், புற்றுநோயாளிகள், சக்கர நாற்காலியின் துணையுடன் நடமாடுவோர் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை சேர்ந்தோர்க்கு தங்களது நான்கு மையங்கள் மூலம் உதவி வருகிறது ‘கம்போங் செனாங் அறப்பணி, கல்வி அறநிறுவனம்’.

‘கிஃப்ட் ஆஃப் குட் ஃபூட்’ எனும் திட்டத்தின்கீழ் புற்றுநோயாளிகளுக்குச் சத்துள்ள உணவு வழங்குதல், சக்கர நாற்காலி, மருத்துவமனைப் படுக்கை வசதிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட நற்பணிகளையும் அவ்வமைப்பு செய்து வருகிறது.

நன்கொடை, தொண்டூழியம் தொடங்கி, அவை குறித்த செய்திகளைப் பரப்புவதுவரை சிறுசெயலும் சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங், “மூத்த தலைவர்களாக, சமூகப் பொறுப்பை வளர்ப்பதில் முன்மாதிரியாகச் செயல்படவும், வழிநடத்தவும் கடமைப்பட்டுள்ளோம். நன்மை செய்வதில் எங்கள் அர்ப்பணிப்பையும் இது வெளிப்படுத்துகிறது,” என்றும் சொன்னார்.

“எங்கள் அறநிறுவனத்தின் நீடித்த பங்களிப்புக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது,” என்று குறிப்பிட்ட கம்போங் செனாங்கின் நிறுவனர் ஜாய்ஸ் லை, அந்நிறுவனத்தின் ஒத்துழைப்பு, கடந்த ஈராண்டைக்காட்டிலும் மும்மடங்கு நிதி திரட்ட உதவியதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், நடமாட்டம் குறைந்த மூத்தோருக்கான பராமரிப்புக் கற்றல், சமச்சீர் உணவு உள்ளிட்ட பல உள்ளடக்கிய திட்டங்களைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும், இவை குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த ஏதுவாக எம்ஆர்டி, பேருந்து நிலைய விளம்பர/காட்சிப் பலகைகள் (display panels) பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்