சமைக்குமுன் அரிசியை ஊறவைப்பது நல்லது

சமைக்குமுன் அரிசியை ஊறவைப்பது நல்லது

2 mins read
487e6441-0659-43e7-a770-d441144b5804
சமைப்பதற்குமுன் அரிசியை ஊறவைப்பது, அது ‘கிளைசீமிக்’ குறியீட்டிலும் (ஜிஐ) ஒட்டுமொத்த ஊட்டச்சத்து அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, நல்ல பலனளிக்கிறது. - படம்: ஊடகம்

நண்பகலில் அரிசி உணவை உண்டபிறகு கண்ணைக் கட்டிக்கொண்டு வரும் உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அதனால் உடல் எடையும் கூடுவதாகக் கருதுகிறீர்களா?

அரிசி உணவைச் சமைக்கும் முறையிலேயே அதற்குத் தீர்வு இருக்கிறது என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள்.

சமைப்பதற்குமுன் அரிசியை ஊறவைப்பது, அது ‘கிளைசீமிக்’ குறியீட்டிலும் (ஜிஐ) ஒட்டுமொத்த ஊட்டச்சத்து அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, நல்ல பலனளிக்கிறது.

உணவிலுள்ள கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து எவ்வளவு விரைவில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பதே ‘ஜிஐ’.

“குறைந்த ‘ஜிஐ’ மதிப்புள்ள உணவுகள் மெதுவாகச் செரித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைப் படிப்படியாக உயர்த்தச் செய்து, உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்கும்,” என்கிறார் இந்தியாவின் ஹைதராபாத் நகரிலுள்ள ‘கேர்’ மருத்துவமனையின் ஊட்டச்சத்து வல்லுநர் டாக்டர் ஜி. சுஷ்மா.

அரிசியை ஊறவைக்கும்போது, குறிப்பாக அதிக மாவுப்பொருள் (ஸ்டார்ச்) உள்ள அரிசி வகைகளில் ஏற்படும் நொதிச் செயல்பாடு அவற்றின் ‘ஜிஐ’ அளவைக் குறைக்க உதவுகிறது.

அதாவது, அரிசியை ஊறவைக்கும்போது, அதிலுள்ள நொதிகள் (என்ஸைம்), அதிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட்டுகளை எளிய சர்க்கரைகளாக உடைக்கும். இதன்மூலம் மனித உடல் அரிசி உணவைச் செரிப்பது எளிதாகி, அதிலுள்ள ஊட்டச்சத்துகளை முழுமையாக ஈர்த்துக்கொள்ள உதவுகிறது.

குறிப்பாக, மனித உடல் ஊட்டச்சத்துகளை ஈர்த்துக்கொள்வதைத் தடுக்கும் பைட்டிக் அமிலம், டானின் போன்ற எதிர்ப்புப் பொருள்களை நொதிகள் உடைத்துவிடும்.

“அத்தகைய சேர்மங்கள், நம் உடல் ஊட்டச்சத்துகளை உட்கவர்வதைத் தடுக்க வல்லவை. அதனால், அரிசியை ஊறவைப்பதன்மூலம் அவற்றின் அளவைக் குறைப்பது, அரிசி உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை நம் உடல் ஈர்த்துக்கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க உதவும்,” என்றார் டாக்டர் சுஷ்மா.

இதன்மூலம் உணவு உண்டதும் ரத்தச் சர்க்கரை அளவு விரைவாக உயர்வதைத் தடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

எவ்வளவு நேரம் ஊறவைப்பது?

அளவிற்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு என்பதுபோல, அரிசியை அதிக நேரம் ஊறவைக்கக்கூடாது. அளவான நேரத்திற்கு அரிசியை ஊறவைத்தால் அதனால் குறிப்பிடும்படியாக எந்தப் பக்கவிளைவும் ஏற்படாது என்பதை டாக்டர் சுஷ்மா உறுதிப்படுத்தினார்.

நான்கு மணி நேரத்திற்குமேல் அரிசியை ஊறவைக்க வேண்டாம் என்பது அவரது அறிவுரை.

நீண்ட நேரம் ஊறவைக்கும்போது, அரிசியிலுள்ள நீரில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளும் தாதுப்பொருள்களும் நீரில் கசியத் தொடங்கும். இதன்மூலம் அதன் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து அளவு குறைந்துவிடலாம்.

அத்துடன், ஊறவைத்த அரிசியை நன்கு கழுவியபின் சமைக்குமாறு டாக்டர் சுஷ்மா பரிந்துரைக்கிறார். அப்படிச் செய்யும்போது அதிலுள்ள அதிகப்படியான மாவுச்சத்தை நீக்க முடியும்.

அதே நேரத்தில், குறிப்பிட்ட உணவுமுறைப் பிரச்சினை அல்லது மருத்துவப் பிரச்சினை இருப்போர் சுகாதாரப் பராமரிப்பு அல்லது ஊட்டச்சத்து வல்லுநருடன் கலந்தாலோசித்தபின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்வது நல்லது என்றும் டாக்டர் சுஷ்மா அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்