எதிர்காலத்தில் புகழ்பெற்ற கலைஞராக வேண்டும் என்பதே காயத்ரியின் இலட்சியம். சிறப்புத் தேவை உடையவர் என்பதை ஓர் இடையூறாக அவரோ அவரது குடும்பத்தினரோ என்றுமே கருதியதில்லை. அவற்றைப் பொருட்படுத்தாது வெற்றிப் பயணத்தில் எப்படிப் பீடுநடை போடுவது என்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்தினர்.
‘ஆர்ட்:டிஸ்’ அறநிறுவனத்தில் ஆறு ஆண்டுகளாகப் பாடல், நாடகம் பயின்றுவந்துள்ள காயத்ரி, அண்மையில் ‘ஆர்ட்:டிஸ்’சுக்கு நிதி நிதிரட்டுவதற்காக ஓர் இசைக் காணொளியை வெளியிட்டுள்ளார்.
காயத்ரிக்குப் பக்கபலமாக விளங்கும் அவரது தாய்மாமன் ஆறுமுகம், அக்காணொளியைத் தொகுத்தார். காணொளியை https://fb.watch/vqZbd_Azgx/ தளத்தில் காணலாம்.
“காயத்ரிக்குப் பாடுவதில் சிறு வயது முதலே அதிக ஆர்வம் இருந்தது. அவரைப் பல பாடல் வகுப்புகளில் சேர்த்தோம். இந்தப் பாடலை வெளியிட நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. காயத்ரி ஒவ்வொரு பாடல் வரியையும் மனனம் செய்து உணர்வுபூர்வமாகப் பாடினார்,” என்றார் ஆறுமுகம், 54.
ஓட்டப்பந்தயத்திலும் பேரார்வம் கொண்டிருக்கும் காயத்ரி, சிறப்பு ஒலிம்பிக்ஸ் சிங்கப்பூர் வழியாகப் பயிற்சி பெற்று, பலமுறை 5 கிலோமீட்டர் ஓட்டங்களில் பங்குபெற்றுள்ளார். “அங்குள்ள தொண்டூழியப் பயிற்றுவிப்பாளர்கள் முழு மனத்துடன் கற்றுத்தருகின்றனர்,” எனப் பாராட்டினார் ஆறுமுகம்.
சவால்களை எதிர்கொண்ட வளர்ப்புமுறை
காயத்ரி சிறுவயதிலிருந்தபோதே அவருடைய தந்தை குடும்பத்தை விட்டு விலகிவிட்டார் . தாயார், தாய்மாமன் ஆறுமுகம், பாட்டி அஞ்சலை மூவரும்தான் காயத்ரியை வளர்த்தனர்.
வளருங்காலத்தில் காயத்ரியைப் பல சிகிச்சைகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டியிருந்தது. “ஒவ்வொரு முறையும் ஏறக்குறைய 75 வெள்ளி செலவாகிவிடும். அப்போது அது பெரிய செலவு,” என நினைவுகூர்ந்தார் காயத்ரியைத் தந்தையின் நிலையிலிருந்து பராமரித்த ஆறுமுகம்.
காயத்ரிக்காக நேரம் ஒதுக்க, தன் முழுநேர வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழிலைத் தொடங்கினார் ஆறுமுகம். நாளடைவில் அதிலும் அவர் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பாலர் பருவத்தில் வகுப்பில் அவருக்கு இரைச்சல் பிடிக்காததால் காயத்ரி அழுதுகொண்டே இருப்பார். அதனால் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை,” எனக் கூறினார் ஆறுமுகம். அதனால், எழுதுதல், படித்தல், பேசுதல் உள்ளிட்ட அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களைக் குடும்பத்தினரே கற்றுத் தந்தனர்.
“அவரது ஒவ்வொரு வெற்றியும் எங்களுக்குப் பெரிய சாதனையே,” என்கிறார் ஆறுமுகம்.
வேலைக்கான முயற்சி
பத்து முதல் 18 வயது வரை ‘மைண்ட்ஸ்’ பள்ளிக்குச் சென்ற காயத்ரி, அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-மைண்ட்ஸ் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிலையத்தின் ‘பேக்கிங்’ பிரிவு வகுப்புகளுக்கு ஏழு ஆண்டுகள் சென்றார்.
நல்ல வேலைவாய்ப்புகளை நாடி வேறு நிறுவனங்களைத் தொடர்புகொண்டபோது, ‘டிக்னிடி கிச்சன்’ (Dignity Kitchen) எனும் சமூக வர்த்தகத்தில் காயத்ரிக்கு வேலை கிடைத்தது. 69 பூன் கெங் சாலையில் அமைந்துள்ள இந்த உணவிடத்தில், சிறப்புத் தேவை கொண்டவர்கள் கடைகளை நிர்வகிப்பதோடு, சிங்கப்பூரிலுள்ள தாதிமை இல்லங்களுக்கு மதிய உணவும் தயாரித்து அனுப்புகின்றனர்.
“சிறப்புத் தேவைகள் கொண்டுள்ள பலருக்கும் வேலையே கிடைப்பதில்லை. வேலை கிடைப்பவர்களில் பலருக்கும் அவர்களின் திறனுக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பதில்லை,” என வருந்திய ஆறுமுகம், எதிர்காலத்தில் தானே ஒரு தொழிலைத் தொடங்கி அத்தகையோரைப் பணியமர்த்த விரும்புகிறார்.
“ஆனால், அதற்கு நிதி தேவை. பெரிய நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கினால்தான் நிதி கிடைக்கும். இப்போதைக்கு எப்படித் தொடங்குவது என எனக்குத் தெரியவில்லை,” என்றார் ஆறுமுகம்.
காயத்ரியின் இசைக் கனவுக்கு உதவ, தனிப்பட்ட கவனிப்போடு ஓர் இசைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி வழங்கினால் அவர் பயனடைவார் என்றார் ஆறுமுகம்.
“எதிர்காலத்தில் காயத்ரி அவர் விரும்பியதைத் தானே செய்ய வேண்டும் என்பதே என் கனவு,” என்றார் ஆறுமுகம்.
“இத்தகைய பிள்ளைகளுக்கு நிகழ்ச்சிகளில் வாய்ப்பளித்தால் நன்றாக இருக்கும்,” எனக் கோரிக்கை விடுத்தார் காயத்ரியின் பாட்டி அஞ்சலை.