குடும்பப் பிணைப்பை வலியுறுத்தும் நோக்கில் எஸ்ஜி60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘நம்ம குடும்பம்’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நால்வர் அடங்கிய 23 குடும்பங்கள் உருட்டுபந்துப் (பவுலிங்) போட்டியில் பங்கேற்றன.
சிங்கப்பூர் பொதுமக்கள் சங்கம், சிங்கப்பூர்’ மீடியாகார்ப் செய்தி நடப்பு, விவகாரப் பிரிவு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி புக்க்ட் பாத்தோக் உருட்டுபந்து வளாகத்தில் நடைபெற்றது.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டியைத் தொடங்கி வைத்தார்.
“குடும்பப் பிணைப்பையும் உடல்நலத்தையும் பேணுவது கடினமானதன்று. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்குவதே சிறந்த வழி,” என்றார் திரு ரசாக்.
மேலும், “பணமும் பொருளும் வரும், போகும். நேரம் அப்படியன்று. அந்தப் பொன்னான நேரத்தைக் குடும்பத்திற்கும் பகிர்ந்தளிப்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும், பெருக்கும்,” என்று திரு ரசாக் சொன்னார்.
தீவெங்கிலுமிருந்து வந்துள்ள மக்களைச் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியளித்ததாகவும் அவர் கூறினார்.
சுகாதாரம், மூத்தோர் உடல்நலம், குடும்பங்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்துப் பேசிய திரு ரசாக், அவற்றுக்கு ஆதரவு வழங்குவது தமது முக்கிய நோக்கமாக இருக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“செய்தி ஓர் ஊடகம் என்பதைத் தாண்டி சமூகத்தின் அங்கமுமாகும். இந்தியச் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். அந்த வகையில் குடும்பங்களுக்கான நிகழ்ச்சி இது,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கீர்த்திகா பெருமாள்.
“எங்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பையும் இது வலுப்படுத்தும் என நம்புகிறோம்,” என்றும் சொன்னார் செய்தி நடப்பு, விவகாரப் பிரிவின் மூத்த செய்தியாளரான கீர்த்திகா.
“குடும்பத்தினருடன் இணைந்து விளையாடுவது அவர்களுக்குள் கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும், துடிப்புடன் செயல்பட வைக்கும். அதனால்தான் குடும்ப விழாவை விளையாட்டுப் போட்டியாக வடிவமைத்துள்ளோம்,” என்றார் பொதுமக்கள் சங்க விளையாட்டுப் பிரிவை மேற்பார்வையிடும் நாதன் பெரியசாமி, 61.
தாத்தா ராம் சிதம்பரம், 76, பேத்தி சற்குணவதி, 23, ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இணைந்து கலகலப்புடன் விளையாடினர்.
“என் இளமைக் காலத்தில் உருட்டுபந்து, காற்பந்து விளையாடும் வழக்கம் இருந்தது. இப்போது மீண்டும் விளையாடுவது, அதுவும் குடும்பத்துடன் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் திரு ராம்.
தமது குடும்பம், இரு சகோதரர்களின் குடும்பங்கள், இரு உறவினர் குடும்பங்களுடன் இணைந்து விளையாட வந்துள்ளதாகச் சொன்னார் சுவா சூ காங் குடியிருப்பாளர் நிர்மலா தேவி பச்சையப்பன்.
“வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாங்கள் இணைந்து நேரம் செலவிடுவோம். வார இறுதியில் இப்படி விளையாடி மகிழ்வதற்கான வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது. வெற்றி தோல்வியைவிட பங்கேற்பு தரும் மனநிறைவே முக்கியம்,” என்று அவர் சொன்னார்.

