தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடியைத் தவிர்க்க நாடக வலையில் சிக்காதீர்!

3 mins read
ed40a12b-e5fc-4fd7-8803-27ba89fe6357
சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படும் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு விளம்பரச்செய்தி. - படம்:

உங்கள் தொலைபேசி மணி ஒலிக்கிறது. நீங்கள் அறியாத எண்ணாக உள்ளது. அழைப்பவர் தாம் காவல்துறை அதிகாரி என்று அடையாளப்படுத்துகிறார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றச் சம்பவத்தில் நீங்கள் தொடர்புடையவர் என்று அவர் விளக்கும்போது உங்கள் மனம் படப்படக்கிறது. அந்தக் “காவல்துறை அதிகாரி” உங்களை “விசாரணையில்” உதவ தாம் கூறுவதுபடி நடக்கச் சொல்கிறார். அதுவும் உடனடியாகச் செயல்படச் சொல்கிறார்.

நீங்கள் என்ன செய்யவேண்டும்? சொல்வதைச் செய்யவேண்டுமா? நிரபராதி என வாதிட வேண்டுமா? சரிபார்க்க வேண்டுமா?

இவ்வகை சூழல் சிங்கப்பூரில் பரவலாகி வருகிறது.

காவல்துறை தரவுகளின்படி 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் அரசாங்க அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியில் 580 பேர் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவான 367 சம்பவங்களைவிட இது 58% அதிகம்.

இதன் விளைவு: மோசடியில் சிக்கிய ஒவ்வொருவரும் சராசரியாக தலா $116,534 இழந்துள்ளனர். மோசடி வகைகளில் பதிவாகியுள்ள ஆக அதிக அளவு இது என்று சிங்கப்பூர் காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஏன் அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியில் இவ்வளவு பேர் சிக்குகின்றனர்?

இதற்கு இரு காரணிகளைச் சுட்டிக்காட்டுகிறார் சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி பொதுக்கல்வி அலுவலகத்தின் துணை இயக்குநர் திரு ஜெஃப்ரி சின். சிங்கப்பூர் ஆணையங்கள் மீதான அதிக அளவு நம்பிக்கையையும் மனரீதியாக மோசடிக்காரர்கள் மக்களை அணுகும்விதத்தையும் அவர் சுட்டுகிறார்.

குற்றம் செய்ததாகப் பழி சுமத்தி மக்களுக்குப் பயத்தை உண்டாக்கி மோசடிக்கு இரையாக்குகின்றனர் அந்த மோசடிப் பேர்வழிகள், என்றார் திரு சின்.

“மக்கள் அதிகாரிகள்மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். முடிவு எடுக்கக் குறுகிய காலமே கொடுத்து நெருக்கடியான சூழலை உண்டாக்குகின்றனர்,” என்றும் அவர் சொன்னார்.

“சிலர் போலியான காவல்துறை அடையாள அட்டை, போலிப் பத்திரங்கள் போன்ற பாவனைப் பொருள்களையும் கொண்டு நம்பவைக்கின்றனர்,” என்று விளக்கினார் திரு சின்.

அறியாத எண்ணிலிருந்து வரும் அழைப்பு சிங்கப்பூர் காவல்துறை அதிகாரியிடமிருந்துதான் வருகிறதா மோசடிக்காரரா என்று எப்படி அறிவது?

இவற்றைக் காவல்துறை அதிகாரிகள் தொலைபேசி அழைப்புவழியோ குறுஞ்செய்தி வழியோ செய்யச் சொல்லமாட்டார்கள் என்கிறார் திரு சின்:

[ο] வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்ப;

[ο] அடையாள அட்டை எண், வங்கி, சிங்பாஸ், மத்திய சேமநிதி தொடர்பான தனிப்பட்ட தகவல்களைக் கோருவது;

[ο] வங்கி இணையத்தளங்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகளில் சொடுக்கச் சொல்வது; அல்லது

[ο] வேறோர் இணையத்தளத்திலிருந்து செயலிகளையோ மென்பொருளையோ பதிவிறக்கம் செய்யச் சொல்வது.

வங்கி ஊழியர், அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம்:

[ο] அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்புமூலம் “வங்கி ஊழியர்” (மோசடிக்காரர்) வங்கிப் பரிவர்த்தனை குறித்து தகவல் உறுதி செய்கிறார்.

[ο] தாம் அந்தப் பரிவர்த்தனையைச் செய்யவில்லை என்று மறுத்தாலோ அதுபோன்ற வங்கி அட்டை வைத்திருக்கவில்லை என்று சொன்னாலோ அந்த “வங்கி ஊழியர்” தொலைபேசி அழைப்பை இரண்டாவது மோசடிக்காரருக்கு மாற்றிவிடுகிறார். அவர் காவல்துறை அதிகாரி போன்றோ சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரி போன்றோ அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

[ο] பணச் சலவை போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டதாக இரண்டாவது மோசடிக்காரர் மோசடியில் சிக்குபவரைக் குற்றம்சாட்டுகிறார். சில நேரங்களில் மூன்றாவது மோசடிக்காரருக்கு “கூடுதல் விசாரணைக்காக” அழைப்பு அனுப்பப்படுவதுண்டு.

[ο] போலி விசாரணைக்காகவோ பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவோ “அதிகாரிகள் சொல்லும் வங்கிக் கணக்குகளுக்கு” மோசடிக்காரர்கள் பணத்தை அனுப்பச் சொல்வார்கள்.

சீன அரசாங்க அதிகாரி, வங்கி ஊழியர், அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம்:

[ο] “அரசாங்க அதிகாரி” அல்லது வங்கி ஊழியர்” போன்ற அடையாளத்தில் அழைப்பு. கடன், பற்று அட்டை விண்ணப்பம் செய்ததாகவோ வங்கிக் கணக்குகள், தொலைபேசி எண்கள் குற்றச்செயல்களுடன் தொடர்பு இருப்பதாகவோ குற்றம்சாட்டப்படுகிறது.

[ο] போலி வதந்திகளையோ தகவல்களையோ பரப்பியது, தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்ட பார்சல் தங்கள் பெயரில் உள்ளது, சட்டவிரோதமாகப் பொருள் வாங்கியது போன்ற குற்றங்கள் சுமத்தப்படுவதும் உண்டு.

[ο] சம்பந்தப்படவில்லையென மறுத்தால் இரண்டாவது மோசடிக்காரருக்கு அழைப்பு மாற்றப்பட்டு சீன அரசாங்க அதிகாரிபோல (சீன காவல்துறை போலவும்) அடையாளப்படுத்தும் அவர், பணச் சலவை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகப் பழிச் சுமத்துவார்.

[ο] விசாரணைக்காகவோ பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவோ பிணைக்காகவோ “சீன அதிகாரிகள் அடையாளம் காணும்” வங்கிக் கணக்குகளுக்குப் பணம் மாற்றச் சொல்லப்படுகிறது.

வங்கி ஊழியரோ அரசாங்க அதிகாரிகளோ இல்லாமல் முதல் அழைப்பே சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்பவரிடமிருந்து வந்த சம்பவங்களும் உண்டு என்பதை காவல்துறை சுட்டியது.

குறிப்புச் சொற்கள்