திடீரென்று காரணமின்றி உடல் எடை குறைதல், அடிக்கடி தொற்றுநோய்கள் ஏற்படுவது, தொடர்ந்து சோர்வாக உணர்தல் போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் மன அழுத்தம் அல்லது வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சினைகளாகப் பலராலும் புறக்கணிக்கப்படுகின்றன.
ஆனால், இவை ரத்தம் சார்ந்த கடுமையான நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் ரத்தவியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் நாகராஜன் சந்திரமௌலி கூறுகிறார்.
‘லுகேமியா’, ‘லிம்போமா’ போன்ற ரத்தப் புற்றுநோய்கள் பெரும்பாலும் சாதாரண நோய்களுடன் குழப்பிக்கொள்ளக்கூடியவையாக, தெளிவற்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகின்றன.
ரத்தப்போக்கு, நிணநீர்க் கணு வீக்கம், மூச்சுத்திணறல், இரவில் வியர்வை, தொடர்ச்சியான காய்ச்சல், தோல் அரிப்பு, எலும்பு அல்லது வயிற்று வலி, களைப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும்.
“திடீரென்று, காரணமின்றி ஏற்படும் அறிகுறிகள் ஒருவரை மிகவும் பாதித்தாலோ அவரது உடல் நிலை கடுமையாக மோசமடைந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்,” என்று அவர் கூறினார்.
நோய்கள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் குணமாகும் வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கலாம் என்பதால், தொடக்கத்திலேயே மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.
சிங்கப்பூரில் ‘அலோஜெனிக்’ மூல உயிரணு (Allogeneic Stem Cell) மாற்று அறுவை சிகிச்சை போன்ற மேம்பட்ட ரத்த நோய் சிகிச்சை முறைகள் இருந்தாலும், இதில் சவால்களும் உள்ளன.
“அலோஜெனிக் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தமான நன்கொடையாளரைக் கண்டறிவது கடினம். குறிப்பாக, இந்தியச் சமூகம் போன்ற சிறுபான்மைச் சமூகத்தினர், நன்கொடையாளர் பதிவேடுகளில் குறைவாகவே காணப்படுகின்றனர்,” என்று டாக்டர் சந்திரமௌலி விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு தனிப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒரு குறிப்பிட்ட ரத்த நோய் ஏற்படுவதன் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற தவறான கருத்து நிலவுவதாக அவர் கூறினார்.
“அது உண்மையில்லை என்றாலும் கலாசாரக் காரணிகள் ரத்த நோய்களுக்கு வழிவகுக்க வாய்ப்புண்டு,” என்றார் டாக்டர் சந்திரமௌலி.
இந்தியச் சமூகத்தில் பரவலாகக் காணப்படும் சைவ உணவு முறையைப் பின்பற்றுவோருக்கு சில நேரங்களில் இரும்பு அல்லது வைட்டமின் பி12 குறைபாடுகள் ஏற்படலாம். இது, தென்கிழக்காசியாவில் இன்னும் பரவலாகக் காணப்படும் மரபணு சார்ந்த ரத்தசோகை நோயான ‘தலசீமியா’ நோய்க்கு வழிவகுக்கலாம். எனவே, சைவ உணவுமுறையைப் பின்பற்றுவோரும் சமச்சீர் உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.
மேலும், இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அதிக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறையும் ரத்த நோய்கள் ஏற்படுவதன் அபாயங்களை அதிகரிக்கின்றன.
இதைத் தடுக்க, “அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவும் உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும் வழக்கமான உடற்பயிற்சியும் அவசியம்,” என்று டாக்டர் சந்திரமௌலி பரிந்துரைக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மருத்துவத்தை மேம்படுத்தியுள்ளன. நோய் கண்டறிதலிலும் நோயாளிக்குச் சீரான பராமரிப்பை வழங்குவதிலும் சிங்கப்பூர் உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுப் பயனாளர்களில் ஒன்றாகும்.
“செயற்கை நுண்ணறிவு நோயாளிகளுக்குத் தனித்துவமான, துல்லியமான சிகிச்சை முறைகளைக் குறைந்த நேரத்தில் வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.
‘கார்-டி செல்’ சிகிச்சை போன்ற புதிய மருத்துவ முறைகளும் ரத்த நோய் மருத்துவத்தின் எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கின்றன. இதில், நோயாளியின் நோயெதிர்ப்பு அணுக்கள் புற்றுநோயைத் தாக்கும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அடைய அன்றாட பழக்க வழக்கங்களைச் சரிசெய்வது அவசியம். அதுமட்டுமல்லாமல், குறைந்தது ஆண்டிற்கு ஒருமுறையாவது மருத்துவப் பரிசோதனை செய்வதும் அறிகுறிகள் தென்படும்போது அலட்சியப்படுத்தாமல் கவனத்தில் கொள்வதும் அவசியம்.
“குறிப்பாக, ஏற்கெனவே ரத்த நோய் ஏற்பட்ட குடும்ப உறுப்பினரைக் கொண்ட ஒருவருக்கு, தொடக்கத்திலேயே பரிசோதனை மூலம் ரத்த நோய் கண்டறியப்பட்டால் அதனால் அவர் பயனடைவார்,” என்று டாக்டர் சந்திரமௌலி கூறினார்.
இதனுடன், பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள், பழங்கள் நிறைந்த சமச்சீர் உணவு முறையைப் பின்பற்றுவதும் நீர்ச்சத்துடன் இருப்பதும் அவசியம். தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உடலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மிகவும் உதவும்.
பண்டிகைக் காலங்களில் பொரித்த உணவு வகைகளுக்குப் பதிலாக வேகவைத்த அல்லது அடுப்பில் சுட்ட உணவு வகைகளைச் சுவைக்கலாம் என்று டாக்டர் சந்திரமௌலி சொன்னார். அதுமட்டுமல்லாமல், புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்பதும் சிறந்தது.
“மன ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பராமரிப்பதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது,” என்று டாக்டர் சந்திரமௌலி கூறினார்.