ஸ்குவிட் கேம்: தமிழாக்கத்திலும் குறையாத தரம்

3 mins read
e88e5377-17b5-4fba-a6dd-f2e23a5a87f7
இந்திய ‘ராப்’ இசை உலகின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான ‘ஹனுமான்கைண்ட்’. - படம்: இணையம்
multi-img1 of 2

திகில்மிக்க திருப்பங்களுக்குப் பெயர்போன ‘ஸ்குவிட் கேம்’ (Squid Game) நாடகத் தொடரின் தமிழாக்க வடிவம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 26ஆம் தேதி வெளிவந்த இந்தத் தொடரின் இரண்டாம் பருவத்தில் ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கதை ஓட்டம், நகைச்சுவைத் தருணங்கள் எனத் தமிழில் குரல் கொடுத்த கலைஞர்கள் வெற்றிகரமாகத் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பருவத்தின் கதாபாத்திர வளர்ச்சி, மிக நுட்பமாகக் கையாளப்பட்டது. அத்துடன், தரமான சண்டைக்காட்சிகளும் சிறப்பான வில்லன் பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் பருவத்தின் திகில் உணர்வு, இரண்டாவது பருவத்திலும் நீடித்துள்ளது.

சிறப்புமிகு தமிழ் ஒலிச்சேர்க்கை

இந்தத் தொடரின் இரண்டாவது பருவம் தமிழ் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, இத்தாலிய, இந்தி, தெலுங்கு, தாய், போர்ச்சுகீசிய மொழிகளிலும் ‘டப்பிங்’ செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு காட்சியில் இடம்பெற்ற ‘ராப்’ பாடல் ஒன்று டிக் டாக், இன்ஸ்டகிராம் தளங்களில் வலம் வந்து பார்ப்போரைப் பரவசப்படுத்தி வருகிறது.

நாடகத்தை தமிழ் ஒலிச்சேர்க்கையுடன் பார்க்கும் ஒருவர், அழகிய பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த ‘தானோஸ்’ என்ற கதாபாத்திரம் தமிழில் ‘ராப்’ பாடுவதைக் கேட்டு வியந்துபோவதைக் காண்பிக்கிறது அந்த டிக் டாக் காணொளி.

“மொழிபெயர்ப்பு மிகவும் பொருத்தமாக இருந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழன் என்ற முறையில் அன்றாடம் தமிழ் உரையாடலைக் கேட்க எனக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்பதால், நான் அதை மிகவும் ரசித்தேன். என் பாட்டியின் கிராமத்தில் சன்டிவி நாடகத் தொடர்களைப் பார்ப்பது போன்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டது,” என்றார் நியூயார்க்கில் வசிக்கும் மின் பொறியாளர் அலிஸ் பன்னீர் செல்வம், 35.

“தமிழில் ஸ்குவிட் கேம்  பார்ப்பது மாறுபட்ட ஓர் அனுபவம். எனக்குப் பிடித்த இந்நிகழ்ச்சி இப்போது, ஆங்கிலம் தெரியாத மூத்த குடும்ப உறுப்பினருடன் காண முடிகிறது. அனைத்துலக அளவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சிக்காக தமிழ்மொழி கருத்தில் கொள்ளப்பட்டதை நினைத்துப் பெருமையாக உள்ளது,” என்றார் மேலாளராகப் பணிபுரியும் 26 வயது சஞ்சய்.

தானோஸ் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்த ரகுவரன் என்ற கலைஞரின் திறமையும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

நாடகத்தின் கதையைத் தமிழில் பின்தொடர்பவர்கள், நாடகத்தின் கதைக்கு தமிழ் வசனங்கள் தனித்தன்மையான பாணியை அளிப்பதை உணரக்கூடும்.

அத்துடன், இந்திய ‘ராப்’ இசை உலகின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான ‘ஹனுமான்கைண்ட்’ (Hanumankind) என்ற புனைப்பெயர் கொண்டுள்ள சூரஜ் செருகட், இந்தத் தொடருக்காக ‘த கேம் டோன்ட் ஸ்டாப்’ (The Game Don’t Stop) என்ற பாடலைப் படைத்தது மற்றொரு சிறப்பம்சம்.

தாள நயமிக்க சொல்லாடலாலும் வாள்வீச்சு போன்ற வரிகளாலும் ‘பிக் டவ்க்ஸ்’ (Big Dawgs) பாடல் முதற்கொண்டு பல்வேறு படைப்புகளின் மூலம் மக்களின் கவனத்தை அனைத்துலக அளவில் ஈர்த்துள்ளார் ஹனுமான்கைண்ட்.

தமிழர்களைச் சென்றடையக்கூடிய தன்மை வாய்ந்த ஒலிச் சேர்க்கை, இந்தியக் கலைஞர் ஒருவரின் ராப் இசை எனத் தரமான கூறுகளைக் கொண்டுள்ள இந்தக் கொரியத் தொடர், தமிழ்ப் பார்வையாளர்களைத் தொடர்ந்து மூன்றாவது பருவத்திலும் ஈர்க்கும் என்று ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்