தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழு ஓட்டத்தோடு திரும்பும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவோட்டம்

2 mins read
7234fa95-db7c-4b9d-9f45-8bc5994fab30
8,600 அனைத்துலக விளையாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 44,000 பேர் பங்கேற்ற ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர்’ நெடுந்தொலைவோட்டம் (எஸ்சிஎஸ்எம்) 2023. - படம்: எஸ்சிஎஸ்எம் 2023

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர்’ நெடுந்தொலைவோட்டம் இவ்வாண்டு நவம்பர் 29 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை மீண்டும் நடைபெறவுள்ளது.

அதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) தொடங்கியது.

இவ்வாண்டு சிறப்பு அம்சமாக ‘எகிடன்’ நெடுந்தொலைவோட்டம் மீண்டும் திரும்புகிறது. ஐவர் கொண்ட அணியிலிருந்து ஒவ்வொருவரும் நெடுந்தொலைவோட்டத்தின் ஒரு பகுதியை ஓடுவர். குழுவுணர்வை வளர்த்து, கூடுதலானோரை ஓட்டத்தில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம்.

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’டின் ‘ஃபியூச்சர்மேக்கர்ஸ்’ திட்டத்திற்கு நிதி திரட்ட உறுதிமொழி எடுக்கும் முதல் 100 நிறுவனக் குழுக்களுக்கு (500 பங்கேற்பாளர்கள்) இலவச ‘எகிடன்’ நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும். அனைத்துலக அளவில் இளம் தொழில்முனைவர்களையும் வேலை தேடுவோரையும் (குறிப்பாக பெண்களை) ஆற்றல்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த தம் ஊழியர்களில் புதிதாக ஓடத் தொடங்கியுள்ளவர்களை ஊக்குவிக்க, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி முதன்முறையாக ‘ஐந்து கிலோமீட்டரும் அதைத் தாண்டியும்’ என்ற புதிய சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசப் பதிவுகள், பயிற்சிகள் போன்ற சலுகைகளோடு நடைபெறும் இச்சவால், ‘ஹோம் ரன்@எஸ்சிஎஸ்எம்’ போன்ற வங்கியின் ஊழியர் நலத் திட்டங்களையும் ஆதரிக்கும்.

இவற்றோடு, வழக்கம்போல் நெடுந்தொலைவோட்டம், அரை நெடுந்தொலைவோட்டம், 10 கி.மீ., 5 கி.மீ., சிறுவர்களுக்கான ‘கிட்ஸ் டேஷ்’ ஆகிய ஓட்டங்களும் இடம்பெறுகின்றன.

நவம்பர் 29ஆம் தேதி ‘கிட்ஸ் டேஷ்’ ஓட்டத்துடன் தொடங்கி, நவம்பர் 30ஆம் தேதி 5.கி.மீ., 10 கி.மீ. ஓட்டங்களோடு தொடர்ந்து, டிசம்பர் 1ஆம் தேதி ‘எகிடன்’ உட்பட அரை, முழு நெடுந்தொலைவோட்டத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெறும்.

இவ்வாண்டும் சிங்கப்பூரின் முக்கிய இடங்களைச் சுற்றி ஓட்டப்பந்தயம் பங்கேற்பாளர்களை அழைத்துச் செல்லும்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அட்டை வைத்திருப்போருக்குப் பதிவுக் கட்டணத்தில் 15% தள்ளுபடி வழங்கப்படும். அவர்களில் அதிர்ஷ்டக் குலுக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நால்வருக்கு 2025ல் ஹாங்காங், தைப்பே, ஹனோய், கோலாலம்பூர் நகர்களில் நடைபெறும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவோட்ட நுழைவுச்சீட்டுகளும் இருவழி ‘இகானமி’ விமானச்சீட்டுகளும் மூன்று இரவுகள் விடுதியில் தங்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

போட்டிகளுக்கு ஆயத்தமாக, ‘எஸ்சிஎஸ்எம் 2024’, ‘ரன்னிங் டிபார்ட்மண்ட்’ இணைந்து நடத்தும் வாராந்திர இலவசப் பயிற்சி ஓட்டங்களுக்கு https://www.runningdept.com/ இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

போட்டியைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://www.singaporemarathon.com/ இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்