ஆண்கள் மனவுறுதி மிக்கவர்கள், உடல் வலிமையானவர்கள், நோய்வாய்ப்படமாட்டார்கள், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்வதும் கேட்பதும் நம் சமூகத்தில் வழக்கம் என்றால் அது மிகையாகாது.
நோய் வந்தால் ஆண்கள் தாங்கிக்கொள்வார்கள் என்று வழக்கமாகவே அவர்களுக்கென ஓர் வரையறையை வகுத்துள்ளது சமுதாயம் என்பதையும் மறுப்பதற்கியலாது.
ஆனாலும், ஆண்கள் தங்கள் உடல்நலத்தின்மீது, குறிப்பாகச் சிறுநீரகங்களின்மீது தனிக்கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது என்று கூறுகிறார் சிறுநீரக மருத்துவ வல்லுநர் மருத்துவர் பழனியப்பன் சுந்தரம்.
பிறகு பார்க்கலாம் எனும் எண்ணம் சிறுநீரக நலனுக்குப் பொருந்தாது
சிறுநீரகக் கற்கள் என்று வரும்போது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.
பெரும்பாலார் கைவைத்தியம் என்ற முறைக்குள் சிறிதுகாலம் கட்டுப்பட்டு இருப்பார்கள்.
எனினும், இதன் தொடர்பில் அவர்கள் தங்களின் உடல்நலத்திற்குத் தரவேண்டிய முக்கியத்துவம், எந்த மாதிரியான அறிகுறிகளைப் புறந்தள்ளக்கூடாது உள்ளிட்ட பலவற்றைப் பகிர்ந்துகொண்டார் செங்காங் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் பழனி.
கற்களின் அளவு சிறியதாக இருக்கும்போது அச்சப்படத் தேவையில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், எதார்த்தம் அதுவன்று என்கிறார் டாக்டர் பழனி.
“சிறுநீரகக் கற்கள் உடல்நலனுக்கு விளைவிக்கும் தீங்கை அவற்றின் அளவு நிர்ணயிப்பதில்லை. சிறுநீரகப் பையை நோக்கிப் போவதற்கு ஒரு குழாய் இருக்கிறது. ஆங்கிலத்தில் அதை ‘யூரேட்டர்’ என்று சொல்வர்.
தொடர்புடைய செய்திகள்
‘‘அந்தக் குழாயில் ஒரேயொரு பாதைதான் இருக்கிறது. எனவே, உடலில் உருவாகிய அந்தக் கல், சிறுநீரகத்திலிருந்து அந்தக் குழாயினுள் செல்லும்போது அடைப்பு ஏற்படாமல் சிறுநீரகப்பைவரை சென்றுவிட்டால் அது தானாக வெளியேறிவிடும்.
‘‘ஆனால், பெரும்பாலான நேரங்களில் பிரச்சினை இருக்கும். கற்கள் உருவாகும்போது அது பொதுவாகச் சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால், அந்தக் குழாயின் அளவும் சிறியதாக இருப்பதால், நாளடைவில் சிறுநீரகக் கல்லின் அளவு நான்கு, ஐந்து மில்லிமீட்டராக வளர்ந்துவிட்டால் அது அடைப்பை ஏற்படுத்தாமல் வெளியாவது அரிது.
‘‘எனவே, அடைப்பு ஏற்படும்போது சிறுநீரகம் வீங்கிவிடும்,’’ என்று டாக்டர் பழனி விவரித்தார். எதனால் அந்த வீக்கம் என்பது குறித்தும் அவர் விளக்கினார்.
பிரசவ வலிக்கு ஒப்பான வலி
‘‘சிறுநீரகப் பையில் சிறுநீர் உற்பத்தியாகும். ஆனால், சிறுநீர்ப் பையில் அடைப்பு ஏற்படுவதால் வீக்கமும் வலியும் ஏற்படுகிறது,’’ என்று குறிப்பிட்ட டாக்டர் பழனி, வலி ஏற்பட்டால் மட்டும் மருத்துவரை நாடலாம் என்று காலந்தாழ்த்துவதால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றார்.
குறிப்பாக, விலா எலும்பில் ஏற்படும் கடுமையான வலி, முதுகு, இடுப்பு எனப் படரத் தொடங்கும். மருத்துவக் கல்லூரியில் தாம் படித்தபோது, இந்த வலியைப் பொதுவாகப் பிரசவ வலியுடன் ஒப்பிடப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதிலிருந்து மீள முதலில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
பரிசோதனையின் முடிவையும் கற்களின் அளவையும் பொறுத்து, அதற்குத் தேவை உடனடி சிகிச்சை தேவையா அல்லது கற்கள் தானாக வெளியேறுவதற்குக் காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து பரிந்துரைக்கப்படும் என்று டாக்டர் பழனி சொன்னார்.
ஒரு சிலருக்கு அடைப்பு ஏற்படுகையில் சிறுநீர்ப் பாதையில் தொற்றும் ஏற்படலாம். அப்படியானால் அதைத் தீவிரமான பாதிப்பு என்று குறிப்பிடுவதுண்டு என்ற அவர், சிலர் அந்நிலையைப் பல நாள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகையில் சிறுநீரகம் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் எச்சரித்தார்.
மாறிவிட்ட பழக்கவழக்கத்தால் நலிவுறும் உடல்நலம்
இப்போதெல்லாம் பலரும் அதிகம் சாப்பிடுகிறார்கள். நவீன உலகில் உணவு உட்கொள்ளும் முறை, தண்ணீர் அருந்துவது உட்பட பல பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன.
உடற்பயிற்சி செய்வதும் குறைந்துவிட்டது. இவையனைத்தும் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணிகளாக அமைந்துவிட்டதாக டாக்டர் பழனி கவலை தெரிவித்தார்.
‘‘சிறுநீரக நலம் தொடங்கி உடல்நலம் எத்தகைய பின்னடவைச் சந்திக்க நேர்ந்தாலும் பெரும்பாலும் உணவுமுறையை நோக்கியே கைநீட்ட வேண்டியுள்ளது,’’ என்ற அவர், “முன்பெல்லாம் நிறைய காய்கனிகளை உணவில் சேர்த்துக்கொண்டோம். இப்போது நிலைமை அப்படியில்லை,” என்றார்.
‘‘தற்போது, விரைவுணவு அதிகம் கிடைக்கிறது. உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்கிறார்கள். பொரித்த உணவையும் விட்டுவைப்பதில்லை. உடலின் மற்ற உறுப்புகளைப் பாதிப்பதுபோல இத்தகைய உணவு சிறுநீரகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவே சிறுநீரகக் கற்கள் என்றே சொல்லலாம்,” என்றார் அவர்.
பருவநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான வெப்பமும் சிறுநீரக நலனில் தாக்கதை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதாவது, வெப்பநிலைக்கேற்ப தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால், எதார்த்ததில் கணிசமானவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இதனால், நீர்ச்சத்து குறைந்து சிறுநீரகக் கற்கள் உருவாக சாத்தியம் உள்ளது.
உடல்நலத்தைப் பேண வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் காணமுடிந்தாலும், சுகாதாரப் பாதிப்புகள் குறைந்தபாடில்லை என்று டாக்டர் பழனி கருதுகிறார்.
சுகாதார நலனைப் பதம்பார்க்கும் வாழ்க்கைத்தொழில்
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் வேலையிடத்திற்குள் நுழைந்துவிட்டால் தண்ணீர் குடிக்காமல், கழிவறையைப் பயன்படுத்தாமல் இருக்கையிலேயே கிடப்போரைப் பார்க்க முடிவதையும் அவர் சுட்டினார்.
எடுத்துக்காட்டாக, வெப்பமான சூழலில் பணியாற்றும் கட்டுமான ஊழியர்கள், சமையல் வல்லுநர்கள், வெளிப்புறங்களில் வேலை செய்வோர் உட்பட பலர் முறையாகத் தண்ணீர் அருந்த இயலாமல் போகக்கூடும். இது சவால் என்றாலும், இதைச் சரிசெய்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்றார் டாக்டர் பழனி.
தாகம் தீர்க்கும் பானம் எல்லாம் நலம் தரும் பானமன்று
* சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களை கஃபேன் சார்ந்த பானங்களைத் தவிர்க்கச் சொல்வது வழமை.
*இனிப்பு பானங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
*அவ்வகையில், ஆகச் சிறந்த பானம் தண்ணீர்தான்.
*சராசரியாக இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியாக வேண்டும் என்று எப்போதும் நோயாளிகளிடம் சொல்வதுண்டு. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கற்கள் உருவாவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
*சிறுநீரின் நிறமும் உடல்நலத்தின் நிலையை வெளிப்படுத்தும். எனவே, தண்ணீர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் அளவிற்கு நீர் பருக வேண்டும்.
*பழச்சாறுகளும் ‘சிட்ரஸ்’ வகை பழங்களும் நல்லது. இவை, கல் உருவாகும் தன்மையைக் குறைக்கும்.
*குளிர்பான வகைகளை மொத்தமாகத் தவிர்ப்பது ஆகச் சிறந்தது.
*சிறுநீரக நலன் சார்ந்த சுகாதாரப் பரிசோதனை அவசியம்.
*சிறுநீர்ப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீரில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பரிசோதனை செய்துகொள்வதும் நன்மை. இவை, பாதிப்புகளை விரைவாகக் கண்டறிய உதவிடும்.
சிறுநீரகத்தில் ஒருதடவை கல் வந்துவிட்டால் கண்டிப்பாக மீண்டும் அது ஏற்படும் என்றில்லை. ஆனால், மீண்டும் கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். திரும்ப வராது என்று நினைத்துக் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. எனவே, அதைத் தவிர்ப்பதற்கான பழக்கவழக்கங்களைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் டாக்டர் பழனி அறிவுறுத்தினார்.
தற்போதைய தொழில்நுட்ப வசதிகளால் கற்களின் அளவு, அவை அமைந்திருக்கும் இடம் என அனைத்தையும் துல்லியமாகக் கண்டறியும் முறை வந்துவிட்டது. சிகிச்சை முறையும் மாறிவிட்டது.
முன்புபோல,பெரிய துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. நுண்சிகிச்சையை சாத்தியப்படுத்தும் உள்நோக்கியியல் (endoscopy) ஆதரவில் பெரிய கற்களைக் கரைத்து அவற்றை வெளியேற்றும் முறையும் வந்துவிட்டது என்று டாக்டர் பழனி சொன்னார். இதன்மூலம் நாள்கணக்கில் மருத்துவமனைகளில் தங்காமல், சிகிச்சை முடிந்த மறுநாள் இயல்புநிலைக்குத் திரும்பி வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.
சிறுநீரகத்தைச் சீராக்கும் முக்கியச் செயல்கள்
*சராசரியாக இரண்டு லிட்டர் அளவு சிறுநீர் வெளியாக வேண்டும் என்று எப்போதும் நோயாளிகளிடம் சொல்வதுண்டு. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கற்கள் உருவாவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
*சிறுநீரின் நிறமும் உடல்நலனை வெளிப்படுத்தும். எனவே தண்ணீர் நிறத்தில் சிறுநீர் போகும் அளவிற்கு நீர் பருக வேண்டும்
*நல்ல உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சுவையை அதிகரிப்பதற்காக உப்பு பரவலாக உணவில் சேர்க்கப்படுகிறது. எனவே, உப்பின் அளவை குறைப்பதால் பலன் கிட்டும்.
*வெளியே சாப்பிடுவதையும் நொறுக்குத் தீனியையும் குறைக்க வேண்டும்.
*உணவு மூலம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எனினும், பலர் இதனை மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்கின்றனர். மாத்திரையாக உட்கொள்வதால் கிடைக்கும் நன்மை, உணவுமூலம் கிடைக்கும் பலனுக்கு ஈடாகாது.