மாவுச்சத்து குறைபாட்டால் கடுமையான பக்கவிளைவுகள்

மாவுச்சத்து குறைபாட்டால் கடுமையான பக்கவிளைவுகள்

2 mins read
9ef15a80-951f-433c-af13-2e7030ed20e4
-

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்ற பெயரில் மாவுச்சத்து குறைந்த உணவு முறையைச் சிலர் மேற்கொள்கின்றனர். 'லோ கார்ப் டயட்' என அழைக்கப்படும் இந்த உணவு முறையில் புரதம் முக்கிய உணவாக இருக்கிறது. கொழுப்பு உணவுகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால், மாவுச்சத்து கொண்ட உணவுப் பொருட்கள் மிகக் குறைவாகவே உட்கொள்ளப்படுகின்றன. இத்தகைய உணவுப் பழக்கத்தின் மூலம் உடல் பருமனை வெகுவாகக் குறைக்க முடியும். ஆனால் அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று குறிப்பிடுகிறது.

மாவுச்சத்து குறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால் இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக 'இஎஸ்சி காங்கிரஸ் 2018' எனும் கருத்தரங்கில் படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 24,825 பேர் பங்கேற்றனர். குறைந்த மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்டவர்களிடையே 32 விழுக்காட்டினர் குறைந்த வயதிலேயே மாண்டதாக ஆய்வு குறிப்பிட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடையே இதய நோய், புற்று நோய், பக்கவாதம் ஆகியவற்றால் முறையே 51%, 35%, 50% பாதிக்கப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதிக அளவிலான அசைவ உணவுகளை உட்கொள்வதும் பழங்கள் உள்ளிட்ட நார்ச்சத்துடைய உணவுகளை உட்கொள்ளாததும் இந்த உணவுப்பழக்கம் கொண்டவர்களிடையே ஏற்படும் பக்கவிளைவு களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வைட்டமின் களும் தாதுப்பொருட்களும் உடலுக்குத் தேவையான அளவுகளிலிருந்து மாறுபட்டு கிடைப்பதும் முக்கிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

அனைத்து உணவுகளையும் சரியான விகிதத்தில் உட்கொள்வதே சிறந்த ஆரோக்கியத்தைத் தரும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்