மார்கழி திருவாதிரை - ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரை - ஆருத்ரா தரிசனம்

2 mins read
ca896fbf-d675-456c-bfef-1c20c0b8a68b
உத்தரகோசமங்கை மரகத நடராஜரின் சந்தனக் காப்பு ஆண்டுக்கொருமுறை மார்கழி திருவாதிரை தினத்தன்று களையப்பட்டு அவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். பின்னர் மீண்டும் அதே நாளில் அவருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படும். படம்: இணையம், செய்தி: கி.ஜனார்த்தனன் -

உலகிலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்திற்கான சிறப்பு வழிபாடுகள் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறவுள்ளன.

மார்கழி மாதத்தின்போது திருவாதிரை நட்சத்திரம் இடம்பெறும் நாள், சிவராத்திரிக்கு ஒப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடைபெறும்.

இந்தியாவில் சிதம்பரம், உத்தரகோசமங்கை முதலிய புராதன சிவன் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும்.

இந்த நாளுக்கென்றே பிரத்தியேகமான சில சடங்குகள் அந்தந்த ஆலயங்களில் பின்பற்றப்படுகின்றன.

தாருக வன முனிவர்களின் அகந்தையை அடக்கி அவர்களுக்கு முன் சிவபெருமான் நடராஜர ரூபத்தில் காட்சியளித்தது இந்நாளன்றுதான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

நெடிய வரலாறு கொண்ட இந்தத் திருநாளைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட சைவ சமய புனிதர்கள் தங்களது தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுக்கு முன்பாகவே கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கிய நூல்கள் திருவாதிரை தினத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மார்கழி மாதத்தின் தொடக்கத்திலிருந்து பெண்கள் நோற்கும் திருவெம்பாவை நோன்பின் கடைசி நாள் இந்நாளே.

திருவாதிரை நாளில் இறைவனுக்குப் பல்வேறு காய்கறிகளால் செய்யப்பட்ட களி படைப்பது வழக்கம்.

தமிழர்களின் பண்டைய விருந்தோம்பல் பண்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தக் களி, இத்திருநாளன்று பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில்...

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அதிகாலை 4.30 மணியளவில் சிறப்பு அபிஷேகமும் 5.30 மணிக்கு மார்கழி மாத பூசையும் இடம்பெறும். 6.15 மணியளவில் நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் ஆலயம் உள்வலம் வருதல் நிகழும். பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்