மோனலிசா
பதினாறாவது முறையாக தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதை எண்ணி பெருமிதம் கொள்கிறார் 73 வயதான தேவி சம்பந்தன்.
தேசிய தின வட்டாரக் கொண்டாட்டங்களில், பைக்குழல் வாசித்து (Bagpipe) இவர் மகிழ்விக்கவுள்ளார்.
திருவாட்டி தேவி பைக்குழல் வாசித்தலில் பழுத்த அனுபவம் பெற்ற முன்னோடி ஆவார்.
1967 ஆம் ஆண்டு மக்கள் கழகம் தொடங்கிய 'சிங்கப்பூர் கேர்ல் பைப்பர்ஸ்' எனும் பெண்கள் பைக்குழல் இசைக்குழுவில் சேர்ந்தார் தேவி.
அவ்வாண்டு முதல் 1980ஆம் ஆண்டுவரை அந்த இசைக்குழுவில் பெருமுரசு (Bass Drum), பைக்குழல் ஆகிய இசைக்கருவிகளை ஒவ்வோர் ஆண்டும் தேசிய தின அணிவகுப்பன்று வாசித்ததாக அவர் கூறினார்.
"1968ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் அதிபர் வருகைக்காக காத்திருந்தபோது திடீரென கடுமையாக மழை பெய்தது. கொட்டும் மழையில் கண் சரியாக தெரியாத சூழலில் துளிகூட அசையாமல் விழிப்பு நிலையில் அணிவகுப்பு ஆரம்பிக்கும் வரை நின்றிருந்தோம். நாட்டுப்பற்றை உணர்த்திய மறக்க முடியாத சம்பவம் அது," என்று நினைவுகூர்ந்தார் தேவி.
1980களில் சிக்லாப் சவுத் சமூக மன்றத்தில் தெமாசெக் பைப்பர்ஸ் எனும் குழுவை உருவாக்க உதவி னார். இப்போது அந்தக் குழு உருமாறி சிங்கப்பூர் பைப் பேண்ட் என்று அழைக்கப்படுகிறது.
சட்ட நிறுவனத்தில் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவருக்கு இரண்டு மகன்களும் நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக சமூக கலை, கலாசார மன்றங்களில் தொண்டூழியம் செய்து வரும் இவர், தென்கிழக்கு வட்டாரக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
இசையைத் தவிர கலை வழியாகவும் அவர் பங்காற்றவுள்ளார்.
"சிங்கப்பூரின் ஒற்றுமையைக் கொண்டாடும் விதமாக தெற்கு-கிழக்கு வட்டார வாசிகளுக்காக குழுவாக 600 கரடி பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி காட்சிக்கு வைக்கவுள்ளோம்.
"கலைகளிலும் ஓவியங்களிலும் எனக்கு அதிக ஈடுபாடுள்ளது. இந்த நடவடிக்கையில் கலந்துகொள்வதன் மூலம் ஒரு குழந்தையாகவே மாறிவிட்டேன்," என்று குதூகலத்துடன் தேவி பகிர்ந்தார்.
திருவாட்டி தேவி குழுவுடன் உருவாக்கியுள்ள கரடி பொம்மைகள் ஆகஸ்ட் 7ம் தேதி மாலை விஸ்மா கேலாங் சிராய் கடைத்தொகுதியில் காட்சிக்கு வைக்கப்படும். திருவாட்டி தேவி பங்குபெறும் பைக்குழல் இசைநிகழ்ச்சி அங்கு மாலை 6 மணிக்கு நடைபெறும்.

