பெரும்பாலான நேரங்களில் பல் ஈறுகளின் சுகாதாரம் குறித்துப் பலரும் அக்கறை கொள்வதில்லை.
ஈறு நோய்கள், பல் நகர்வு, பல் இழப்பு போன்ற விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், ஆரோக்கியமற்ற ஈறுகளுக்கும் நீரிழிவு, பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றுக்கும் தொடர்புள்ளதாக அண்மைய ஆய்வுமுடிவுகள் குறிப்பிடுகின்றன.
மரபணு, புகைப்பழக்கம், நீரிழிவு, குறைவான நோய் எதிர்ப்பாற்றல் போன்றவை ஈறு நோய்கள் உண்டாகும் வாய்ப்பை அதிகரித்தாலும், அவை உண்டாக சரியான பல், ஈறு சுகாதாரப் பராமரிப்பு இல்லாததே முக்கியக் காரணமாக திகழ்கிறது.
ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையே சேரும் பற்காரையை சரியாகச் சுத்தம் செய்யாவிடில் நாளடைவில் அது கெட்டியாகிவிடும்.
அந்தப் பற்காரை மேலும் வளர்ந்து ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரிப்பதால் பற்களிலிருந்து ஈறுகள் பிரியத் தொடங்கும்.
நாளாக ஆக, பற்காரை இன்னும் அதிகமாகி, பற்களைத் திடமாக வைத்திருக்கும் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம். இதனால் பற்கள் உறுதியிழந்து விழக்கூடும்.
ஆரோக்கியமற்ற ஈறுகளை அடையாளம் காண ‘சிங்ஹெல்த்’ இணையப்பக்கத்தில் சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆரோக்கியமான ஈறுகள் இளஞ்சிவப்பாகவும் தொட்டால் உறுதியாகவும் இருக்கும்.
ஆரோக்கியமற்ற ஈறுகளுக்கான அறிகுறிகள் இதோ:
- பல் துலக்கும்போது ரத்தம் கசிதல்
- சிவந்த ஈறு அல்லது ஈறுவீக்கம்
- ஈறு தேய்மானம்
- உறுதியற்று ஆடும் பற்கள்
- பல்நகர்வு
- வாய் துர்நாற்றம்
இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருப்பின் பல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே சிறப்பு.
ஈறுகளை ஆரோக்கியமான நிலையில் வைத்துக்கொள்ள நாள்தோறும் இருமுறை பல் துலக்கி, நூலால் சுத்தம் செய்ய வேண்டும்.
பல், ஈறு ஆரோக்கியத்தைப் பரிசோதிக்க பல் மருத்துவரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பார்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.


