வாழ்க்கையில் ஆபத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இளையர்கள், தங்களது அடையாளங்களைக் கலை, இசை வழியாக அறிந்துகொள்வதை ‘என் அடையாளம்’ எனும் கலைத் தொகுப்பு வலியுறுத்தவுள்ளது. ஐந்து கலைஞர்களின் கதைகளை எடுத்துக்கூறும் இந்த ஐந்து பாகத் தொடர், நடனத்தையும் இசையையும் முன்வைத்து அரங்கேறவுள்ளது.
உளவியலாளர் மைக்கல் டம்பரன் நம்பும் மனிதனின் ஐந்து தன்னலமற்ற பண்புகளைக் கருவாகக்கொண்டு உருவாகியுள்ள இந்தக் கதைத் தொகுப்பு பார்வையாளர்கள் தங்களைத் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளும் வகையில் அமையும் என்று நம்பப்படுகிறது.
நம் சமுதாயத்தில், குறிப்பாக இளையர்கள் எவ்வாறு புத்தாக்க வழிகள் மூலம் சமூகத்திற்குக் கைகொடுக்கலாம் என்பதும் இந்தத் தொடரில் முன்னிலைப்படுத்தப்படும். தேசிய கலை மன்றமும், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி இரண்டாவது முறையாக அடுத்த மாதம் 22ஆம் தேதி அன்று அலிவால் கலை நிலையத்தின் பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெறும்.
புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞர் நிரஞ்சன் பாண்டியன், நடன இயக்குநர் அம்புஜா திருநாவுக்கரசு, சமகால நடனமணி கவிதா கிருஷ்ணன் ஆகியோரும் இதர கலைஞர்களும் இந்தப் படைப்பில் பங்கேற்கவுள்ளனர். நிகழ்ச்சி பிற்பகல் 3.30 மணிக்கும் மாலை 7.30 மணிக்கும் ஒரே நாளில் நடைபெறும்.
பொதுமக்கள் https://peatix.com/ என்ற இணையத்தளம் வழியாக நுழைவுச்சீட்டுகளை $28க்குப் பெற்றுக்கொள்ளலாம். முழு நேர தேசிய சேவையாளர்கள், மாணவர்கள், முதியோர்கள் $23க்கு நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.