தமிழ் இலக்கியங்களையும் பாரம்பரியக் கலைகளையும் கொண்டாட ‘குட்மென் ஓப்பன் ஹவுஸ்’ எனும் விழா வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது. குட்மென் ஆர்ட்ஸ் சென்டரில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் மக்கள் காலை பத்தரை மணியிலிருந்து பல நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கவிதை வாசிக்கும் அங்கம் இடம்பெறும். அதில் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களை ஒட்டி வினாவிடைப் போட்டி ஒன்றும் நடத்தப்படும். போட்டியில் கவர்ச்சியான பரிசுகளை வெல்ல வாய்ப்புண்டு. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இதனை நடத்துகிறது.
அதனைத் தொடர்ந்து, ராஜா ரவிவர்மா ஓவியங்களில் இடம்பெறும் ராமாயணக் கதாபாத்திரமான சீதாவை முன்னிட்டு நடனம் ஒன்று படைக்கப்படும். அப்சராஸ் ஆர்ட்ஸ் நடன குழு வழங்கும் ‘சீதா’ என்ற நடனம், ரவிவர்மனின் சீதை தொடர்பான ஓவியங்களின் கதைகளை நம் கண்முன் கொண்டுவந்து காட்டும். டாக்டர் ராஜ்குமார் பாரதியின் இசையில், பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் இந்த நடன நிகழ்ச்சிக்குப் பாடியுள்ளார். பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2.15 மணி, 3 மணி என்று மூன்று முறை இந்த நடன நிகழ்ச்சி இடம்பெறும்.


