நீரிழிவு, இதயநோயிலிருந்து காத்துக்கொள்ள, செயற்கையாக இனிப்பூட்டும் வேதிப்பொருள்களை நம்பி இருக்காமல் சரியான உணவுப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டு நம் உணவில் சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை மட்டுமின்றி, கொழுப்பு, சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றை உண்பதன் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள குறிப்புகளையும் பின்பற்றவேண்டும் என்று சிங்கப்பூர் நீரிழிவுச் சங்கத்தின் தலைவர் கல்பனா பாஸ்கரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்க சர்க்கரைக்கான செயற்கை மாற்றுப்பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டது பற்றிய தமிழ் முரசின் கேள்விகளுக்கு டாக்டர் கல்பனா பதிலளித்தார்.
ஏஸ்சல்ஃபேம் கே, எஸ்பார்ட்டேம், எட்வான்ட்மேம், சைக்கிளமேட்ஸ், நியோட்டேம், சாக்கரின், சுக்ரலோஸ், ஸ்டிவியா உள்ளிட்டவை சர்க்கரைக்கான செயற்கை மாற்றுப்பொருள்கள். ‘டைப் 2’ எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவின் அபாயத்தை இத்தகைய வேதிப்பொருள்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் காட்டுகின்றன. நற்சத்து இல்லாத இந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உணவில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதை ஆய்வுமுடிவுகள் வலியுறுத்துகின்றன.
வேதி மாற்றுப்பொருள்கள் நல்லதல்ல என்பதற்காக அவற்றுக்குப் பதிலாக சர்க்கரையையே நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம் என்ற சிலர் குதர்க்கமாகக் கூறுவது ஏற்கத்தகாதது என்று தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ‘கிளைசெமிக்’ குறியீட்டு ஆய்வுத் துறையில் தலைவராக உள்ள டாக்டர் கல்பனா கூறினார்.
பழமும் வரக்காப்பியும்
பழங்களில் இனிப்பாக உள்ள ‘பாலியால்’ (polyol) எனப்படும் வேதிப்பொருள், சர்க்கரையிலுள்ள கலோரியைவிட பாதிக்கும் குறைவான கலோரியையே கொண்டுள்ளது. ஆனால், அவற்றை அதிகம் உண்ணும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் மிதமான அளவில் சாப்பிடவேண்டும் என்று டாக்டர் கல்பனா அறிவுறுத்தினார்.
பழச்சாறாக அருந்துவதைக் காட்டிலும் பழங்களை நேரடியாக உண்பதால் அவற்றிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை வெளியீட்டை மெதுவாக்கும். தண்ணீரே சிறந்த தெரிவு என்றாலும் சுவையை விரும்புவோர் எலுமிச்சைத் துண்டுகளை தண்ணீரில் சேர்த்துப் பருகலாம் என்று டாக்டர் கல்பனா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“துளசி, புதினா, பாண்டான் இலைகள் போன்றவற்றையும் சேர்க்கலாம்,” என்றும் அவர் சொன்னார்.
பாலும் சர்க்கரையும் இல்லாத வரக்காப்பியை அருந்துவது ‘டைப் 2’ நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். ஆயிலும் வரக்காப்பி அதிகம் குடிப்பது நெஞ்செரிச்சல் (heartburn) ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவையும் உயர்த்திவிடும் என்று டாக்டர் கல்பனா குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு வேளை சாப்பிடும்போது இலை, காய்கறிகளையும் தரமான புரதச்சத்துகளையும் சேர்த்து, கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள்,” என்பது அவரின் அறிவுரை.