பெண் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதும் பாதுகாப்பதும் பெற்றோரின் கடமையாகும். வாழ்க்கையில் பீடு நடை போட அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் கூறுவதும் திறன்களைக் கற்றுத்தருவதும் மிகவும் முக்கியம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைத்துச் சூழல்களிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சுயமாக முடிவெடுத்து வெற்றி நடை போடவும் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளவும் தேவையான திறன்களை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
ஆண் பிள்ளைகளைப் போலவே பெண் பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பலரைச் சந்திப்பர். அவ்வாறு சந்திப்பவர்கள் எத்தகைய குணம் படைத்தவர்கள் என்பதை கவனமாக ஆராயும் திறனை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். கண்மூடித் தனமாக யாரையும் நம்பிவிடக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் எடுத்த எடுப்பிலேயே மற்றவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதும் முறையல்ல என்று அவர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும்.
தங்கள் தேவைகளைத் திறம்பட, நியாயமான வகையில் பூர்த்தி செய்வது முக்கியம் என்றும் அதற்கான மனப்பான்மை அவர்களுக்கு உருவாகும்படி அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும். பெண் பிள்ளைகளின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் பெற்றோர் பாராட்டி அவர்களைத் தட்டிக்கொடுக்க வேண்டும். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுப்படுத்தும்.
கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும் அவசியம். வாழ்க்கையில் பலதரப்பட்ட சூழல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றில் வெற்றி பெற கல்வியும் துணிச்சலும் பெரிதும் கைகொடுக்கும் என்றும் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும்.

