சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 23ஆவது பொதுக்கூட்டத்தில் அடுத்த ஈராண்டுக்கான புதிய செயலாளராக முன்னைய பொருளாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய பொருளாளராகத் திருவாட்டி மணிமாலா மதியழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக திரு. நா ஆண்டியப்பனும் துணைத் தலைவராக திரு. சு. முத்துமாணிக்கமும், துணைச் செயலாளராக திரு. கோ. இளங்கோவனும் நீடிக்கின்றனர்.
திரு. அன்புச்செல்வன், திருவாட்டி மலையரசி, திருவாட்டி பிரதீபா வீரபாண்டியன் ஆகியோர் செயலவை உறுப்பினர்களாக நீடிக்கின்றனர். திரு சிவக்குமார் கே.பி., திரு. ந. சரவணன், திருவாட்டி வ. ஹேமலதா ஆகிய மூவரும் புதிய செயலவை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
கடந்த 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் செயலவையினர் அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தற்காலிகத் தலைவராகச் செயல்பட்ட கழகத்தின் முன்னைய துணைத் தலைவர் திரு. இரா. துரைமாணிக்கம் அறிவித்தார்.
கடந்த 47 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் தற்போது 112 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 35 உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். வருங்காலச் சவால்களைக் கருத்தில்கொண்டு கழகத்தின் சட்டதிட்டங்களில் திருத்தங்களைச் செயலவை பரிந்துரைத்தது. அந்தத் திருத்தங்களையும் உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் முதல் பிரதமருமான திரு. லீ குவான் இயூவின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று கழகம் தெரிவித்தது.