கடந்த ஆண்டு எலான் மஸ்க் ‘டுவிட்டர்’ சமூக ஊடகத்தை வாங்கியதிலிருந்து, தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், ‘மெட்டா’ நிறுவனம் டுவிட்டருக்குப் போட்டியாக எழுத்துகள் அடிப்படையில் உரையாடலுக்கான ‘திரெட்ஸ்’ என்னும் புதிய செயலியை ஜூலை 6ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது.
‘திரெட்ஸ்’ செயலி எப்படி இருக்கும்?
இந்தச் செயலி மூலம் பயனர்கள் நிகழ்நேர இடுகைகளைப் பதிவிடவும் பகிரவும் பிறருக்கு அனுப்பவும் முடியும்.
டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட இடுகையைத் தொடர்ந்த பல கருத்துப் பதிவுகள், ‘திரெட்ஸ்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், அதையே மெட்டா நிறுவனம் தன் செயலியின் பெயராக வைத்திருக்கிறது.
இந்தத் ‘திரெட்ஸ்’ கணக்கைப் பயனர்கள் தங்களின் புகைப்படங்களைப் பகிரும் தளமான ‘இன்ஸ்டகிராம்’ கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் இயலும்.
‘திரெட்ஸ்’ செயலி அறிமுகப்படுத்தப்படுவது ஏன்?
‘மெட்டா’ நிறுவனம் டுவிட்டர் பயனர்களைக் கவரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. மெட்டா தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸ், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிறுவனக் கூட்டத்தில், திரெட்ஸ் செயலி பற்றி, ‘இது டுவிட்டருக்கு எங்கள் பதில்’ என்று குறிப்பிட்டதாக ‘தி வெர்ஜ்’ இணையத்தளச் செய்தி கூறுகிறது.
“படைப்பாளிகள், பொதுமக்கள் எனப் பலரும், நிதானமாக இயங்கும் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்த ஆர்வம் கொண்டுள்ளது தெரியவந்தது,” என்று கூறிய திரு கிறிஸ், “கடந்த 2022ஆம் ஆண்டு ‘டுவிட்டரை’ வாங்கியதில் இருந்து அதன் தலைவர் மஸ்க் நிறுவனத்தை எப்படி நடத்தி வருகிறார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது”, என்றார்.
‘டுவிட்டருக்கு’ மாற்று தேவையா?
தனது நிறுவனப் பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை நீக்கியது, சரிபார்க்கப்பட்ட கணக்குகளை வைத்திருக்கக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது, பயனர்கள் ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடிய இடுகைகளின் எண்ணிக்கையில் வரம்பை அமல்படுத்தியது எனத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய மாற்றங்களை செய்து வருகிறது ‘டுவிட்டர்’ நிறுவனம்.
தொடர்புடைய செய்திகள்
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து இடுகைகளைப் பதிவிட அனுமதிக்கும் ‘டுவிட்டர் டெக்’ சேவை ஆகஸ்ட் மாதம் முதல் கட்டணச் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறி, அதன் இலவசப் பயனர்களைத் துண்டித்தது.
இந்த மாற்றங்கள் பல பயனர்களிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்ததோடு சில செய்தி நிறுவனங்களின் புறக்கணிப்பிற்கும் வழிவகுத்தது.
எத்தனை பேர் டுவிட்டரைவிட்டு வெளியேறியுள்ளனர்?
டுவிட்டர் தளம் தன் பயனர்களின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மஸ்க் பொறுப்பேற்ற சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சி நட்சத்திரம் ஓப்ரா வின்ஃப்ரே, இசைக்கலைஞர் எல்டன் ஜான் உட்பட அதிக எண்ணிக்கையில் பின்தொடர்வோரைக் கொண்டிருந்த பலர் டுவிட்டரைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். நடிகர்கள் ஜிம் கேரி, ஹூப்பி கோல்ட்பர்க் ஆகியோரும் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளனர்.
டுவிட்டருக்கு மாற்றாகத் தங்களை சந்தைப்படுத்தும் பல பயன்பாடுகளான, ‘மாஸ்டோடன்’ எனும் இணையத்தளம், ‘இன்வைட்-ஒன்லி ப்ளூஸ்கி சோஷியல்’ எனும் செயலி உட்பட அனைத்துமே பயனர்களின் எண்ணிக்கையில் ஏற்றம் கண்டது.
‘பரவலாக்கம் (Decentralized)‘ என்றால் என்ன?
‘ஆக்டிவிட்டி பப்’ எனப்படும் ‘பரவலாக்கப்பட்ட’ சமூக ஊடக நெறிமுறைகளுடன் ‘திரெட்கள்’ ஒருங்கிணைக்கப்படும்.
இது இணையத்திற்கான வெளிப்படையான தரநிலைகளை உருவாக்கும் அனைத்துலகக் கூட்டமைப்பான ‘வோர்ல்ட் வைட் வெப்’ உருவாக்கிய நெறிமுறை என்று குறிப்பிட்டுள்ளது ‘தி வெர்ஜ்’ செய்தி அறிக்கை.
இந்த நெறிமுறை பல்வேறு சேவைகளுக்குத் தரவுகளைப் பகிர்வதற்கான வழியை வழங்குவதோடு பயனர்கள் வெவ்வேறு தளங்களில் பொருள்கள் வாங்குவதைச் சாத்தியமாக்குகிறது.
மேலும், பயனர் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் கூடுதல் கட்டுப்பாட்டை அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.