சிங்கப்பூரில் அதிக அளவில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது கருப்பை வாய் புற்றுநோய்.
இப்புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவுகிறது ‘பெப் ஸ்மியர்’ பரிசோதனை.
பாலியல் உறவுகளில் ஈடுபடும் 25 முதல் 65 வரையுள்ள பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சோதனையை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
நோய் வருமுன் காக்க இந்த ‘பெப் ஸ்மியர்’ சோதனையை சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம், மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள் போன்ற இடங்களில் செய்துகொள்ள முடியும்.
மார்பக, கருப்பை வாய் புற்றுநோய் தனது குடும்பத்தில் உள்ள பெண்களை பாதித்துள்ளதால் 28 வயது காயுத்ரி, இவ்வாண்டு முதல் முறையாக இந்தச் சோதனையை செய்துகொண்டார்.
“இந்த நோயால் என் குடும்பத்திற்கு ஏற்பட்ட வலியை மீண்டும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்பதால் சிறு வயதிலிருந்தே இந்தச் சோதனையை செய்ய முடிவு செய்தேன்,” என்று காயுத்ரி கூறினார்.
வலியில்லாத இந்த சோதனையில் உடற்கூறு உட்காட்டி கருவி மூலம் பிறப்புறுப்பு உள்புறத்திலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு புற்றுநோய் சோதனைக்கு அனுப்பப்படும். இருபது நிமிடங்களுக்குள் இந்தச் சோதனையை முடித்துவிடலாம்.
“வலியில்லாமல் பரிசோதனையை சீக்கிரமாக முடித்தாலும், முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நேரம் அச்சத்தை உண்டாக்கியது. நமக்கும் இது நடந்துவிடும் என்ற பயத்துடன் வாழ்வதைவிட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது,” என்பதை தமிழ் முரசிடம் காயுத்ரி பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கருப்பை வாய் மாற்றங்களையும் உயிரணுக்களின் இயல்பு மாற்றங்களையும் கண்டறிந்து புற்றுநோயாக மாறுவதற்கு முன் சிகிச்சையளிக்க இந்த ‘பெப் ஸ்மியர்’ பரிசோதனை வழிவகுக்கிறது.
இந்தச் சோதனையை பற்றி இதற்கு முன் கேள்விப்படாத 44 வயது சுபா ஜித், மருத்துவமனைகளில் சோதனைகளைப் பெற ஊக்குவிக்கும் சுவரொட்டிகளைக் கண்டு தனது மருத்துவரிடம் மேல் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
“புற்றுநோய் பற்றி தெரியாத எனக்கு மருத்துவர் எளிதாக விளக்கி இந்தச் சோதனையின் அவசியத்தை எடுத்துரைத்தார். என் குழந்தைகளுக்காக நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதால் இதுபோன்ற சோதனைகளும் தடுப்பூசிகளும் எடுப்பதன் அவசியத்தை அறிந்தேன்,” என்றார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான திருமதி சுபா.